பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

கால் பந்தாட்டம்


வேண்டும் என்பதோ கட்டாயம் அல்ல. வருகின்ற பந்து எப்படி வருகிறது என்பதைப் பொறுத்தே நிறுத்தும் இடமும், பொருத்தும் அங்கமும் நமக்கே புரியும்.

தரையோடு தரையாக பந்து வந்தால், கால்களால் நிறுத்தலாம். தரைக்கு சிறிது மேலாக பந்து வந்தால், முழங்கால் அல்லது தொடைகளால் தடுத்து நிறுத்தலாம். தரையிலிருந்து மேலே மேலே உயர உயர, இடுப்பும், அடிவயிறும், மார்பும், தலையும் தடுத்து நிறுத்தப் பயன்படும்.

ஆகவே, எவ்வாறு பந்தை நிறுத்துவது, எப்படி நிறுத்துவது, என்பதனைப் புரிந்து கொள்ள, அதிக உழைப்பு தேவை. இதைவிட முயற்சி தேவை. சரியான நேரத்தில் சரியான சமயத்தில், சரியான நிலையில் பந்துடன் தொடர்பு கொண்டால்தான் பந்தைத் தடுக்கலாம். இந்தத் திறன் நுணுக்கத்தினால் பந்தைத் தன் வசம் கட்டுப்படுத்திக் கொள்ள எளிதாக இருக்கும்.

3. பந்தை உதைத்தாடல் (Kicking)

பந்தை உதைப்பதில் வல்லமை வேண்டும். அது இடது காலாக இருந்தாலும் சரி, வலது காலாக இருந்தாலும் சரி, மாறி மாறிப் பந்தை உதைக்கும் திறத்தால்தான், கால் பந்தாட்டம் சோபிக்கும்.

நிலையாக வைக்கப்பட்டிருக்கும் பந்தை உதைப்பது, அது தனி உதையாக இருக்கலாம். ஒருநிலை உதையாகவும் இருக்கலாம். எல்லாவற்றையும் வலிமையுடன், குறித்த இடத்திற்கு, தான் நினைத்த இடத்திற்குப் பந்தை உதைத்தாடுகின்ற திறனே, ஆட்டத்திற்குக் கண் போன்றதாகும்.