பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
89
 

அனுப்பினால் எளிதாக, பத்திரமாகப் பந்து அவரிடம் போய்ச் சேரும்? இடைவெளி கிடைக்கிறதா? என்பதை யெல்லாம் ஆராய்ந்து அவசரப்படாமல்,நிதானப்படுத்திக் கொண்டு, இடைவெளிக்குரிய (Gap) சூழ்நிலையை உண்டுபண்ணியே, பந்தை வழங்க வேண்டும்.

அந்த நேரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, காலதாமதம் செய்வதும் கூடாது. விரைந்து செயல்பட்டு, நேரம் பார்த்து, இடம் பார்த்து, சரியாக வழி காட்டுவது போலவே பந்தை வழங்க வேண்டும்.

எந்த எதிர்க்குழு ஆட்டக்காரர் சரியாக ஆடத் தெரியாமல் தடுமாறுகின்றார் என்பதை அறிந்து கொண்டு, அவர் பக்கமே பந்தை வழங்கி முன்னேறுவதையும் கடைப்பிடிக்க வேண்டும். அதுவே சிறந்த முறையுமாகும்.

தவறான வழங்குமுறை அக்குழு தோற்பதற்குரிய வாய்ப்பினை அளித்துவிடும். எதிர்க்குழுவினர் முன்கூட்டியே உணர்ந்து கொண்டு, வந்து, தடுத்து நிறுத்தி, தங்கள் வசம் பந்தை எடுத்துக் கொள்ளக்கூடிய நிலையில் பந்தை வழங்குதல் மிகவும் அபாயகரமான ஆட்டமாகும். இப்படி ஆடினால், குழுவினருக்குள்ளே குழப்பத்தையும் மன உளைச்சலையும் அதனால் தோல்வி மனப்பான்மையையும் உண்டுபண்ணிவிடும்.

இன்னும் ஒன்று, தன்னைப் பெரிய ஆட்டக்காரர் என்று எல்லோரும் நினைக்க வேண்டுமென்றும், எதிரிகளை அங்குமிங்குமாக அலைக்கழிக்க வேண்டுமென்றும் எண்ணி உருட்டி ஆடுவது (Dribbling) அறிவற்ற செயலாகும்.