பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

கால் பந்தாட்டம்


இதனால் நேரம் வீணாகக் கழிகிறது. சக ஆட்டக் காரர்களின் ஆடும் உற்சாகம் குறைகிறது. மனக்குழப்பம் மிகுதியாகிறது. நமக்கு பந்து எங்கே வரப்போகிறது என்ற அசட்டையான மனப்போக்கும் வந்துவிடுகிறது. ஆட்டத்தில் ஒருவிதப் பிடிப்பின்றி, குழு ஒற்றுமையே குலைந்து போகிறது என்பதுடன், தானே ஆடும் ஆட்டக்காரர், பிறரால் தாக்கப்பட்டு வேதனைப்படுவதுடன், தன் குழுவின் வெற்றிக்கும் கேடிழைத்து விடுகிறார். ஆகவே, இக்கருத்தை எல்லா ஆட்டக்காரர்களும் அறிந்து, மாற்றிக் கொண்டு நன்கு ஆட வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

இலக்கிற்குள் பந்தடிப்பவருக்குத்தான் புகழ்வரும் என்பது ஒரு தவறான கருத்து. அந்தக் குழுவே புகழுக்குரியதுதான். ஆகவே, பாங்கருக்கு வழங்கும் பாங்கே, குழுவின் வெற்றிக்கும் நிலையான புகழுக்கும் வழிவகுக்கும் என்பதால், பந்தை வழங்கி மாற்றிக் கொண்டு ஆடினால், அதுவே குழு ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும் அமையும்.

5. தலையாலிடித்து ஆடுதல் (Heading)

கால்பந்தாட்டத்தில் தலையால் இடித்து பந்தை விளையாடுதல் என்பது ஒரு சிறந்த அழகுக் கலையாகும்.

உயரமாக வரும் பந்தை உடனே ஆடி எதிர்பக்கமாக அனுப்பவும்; பலர் கூடித் தாக்கும் பொழுது, கூட்டத்திலிருந்து சமாளித்து, பந்தை அந்த இடத்திலிருந்து அனுப்பிட கால்களால் நிறுத்தி ஆடுவது கடினமானது என்பதால், தலையாலே இடித்துத் தள்ளவும்; வேகமாகவும் விறுவிறுப்பாகவும் ஆட்டம் இருக்கவும் இம்முறை பயன்படுகிறது.