பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
91
 

இலக்கின் பரப்பிற்குள்ளே இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து விடுபட, இம்முறையாட்டமே சிறந்தது என்பது வல்லுநர்களின் கருத்து. முனை உதையிலிருந்து வரும் பந்தையும், இலக்குப் பரப்பைத் தாக்கும்போது அங்கு தலையால் மோதியே பந்தை அனுப்பும் லாவகமும் பிறர் போற்றற்குரிய அரிய கலையாகும்.

பந்தை முன் நெற்றியால் மோதலாம். தலையின் பக்கவாட்டில் இடிக்கலாம். ஆனால், தான் நினைக்கின்ற திசைக்குப் பந்தை அனுப்புவதுதான் தலையான திறமையாகும். ஒரு குழுவின் உயரமான ஆட்டக்காரர்கள், எதிர்க்குழுவினர் குள்ளமாக இருந்தால், அவர்களை ஏமாற்றி ஆட, தலையாலிடித்தாடும் ஆட்டத்தையே மேற்கொள்ளுவார்கள்.

ஆகவே, கால்பந்தாட்டத்திற்குக் கவர்ச்சியையும், கட்டுக் கோப்பான அமைப்பையும் தருகிற இத்திறமையால் வரும் செயல்கள் எல்லாம், நிறைந்த பயனை நல்கும் என்பதை, உணர்ந்து பயில்வது உண்மையிலேயே, உறுதுணை பயக்கும்.

6. குறியோடு உதைத்தல் (Shooting)

ஆட்டத்தின் நோக்கமே, பந்தை எதிர்க்குழு இலக்கினுள் செலுத்தி, வெற்றி எண் பெறுவதுதானே! அதற்குக் குறியுடன் உதைக்கும் திறன் தானே என்றும் கைகொடுக்கும்! பந்தைத் தாக்கியும், தேக்கியும், தடுத்தும் கொடுத்தும், தள்ளியும், பந்துடன் ஒடியும், மார்பால் வயிற்றால் தலையால் தேக்கி இறுதியில் இலக்குவரை சென்று, வெற்றி எண் பெறாது திரும்பி வருவதால் என்ன லாபம்?