பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
94
கால் பந்தாட்டம்
 

சமாளிக்கவும் முயல வேண்டும். திறமையில்லாமல் துணிவது தோல்விக்கு வித்திடுவது போலாகும்.

மேற்கூறிய முறைகளில் எல்லாம் ஆடுகிறோம். நம்மை விட எதிர்க்குழுவினர் நன்றாக ஆடுகின்றார்கள் என்றால், அதற்காக அயர்ந்துவிடுவதோ, ஆர்வத்தில் குறைந்து விடுவதோ, முயற்சியில் குலைந்து விடுவதோ கூடாது. எதிர்க்குழுவின் இலக்கை நோக்கி அடுத்தடுத்து முயற்சிகளை மேற்கொண்டால், நமது முயற்சியில் வெற்றி பெறலாம். இல்லையென்றாலும் அதிக வெற்றி எண்களை இழந்து, தோற்காமல் தடுத்துக் கொண்டாலும் கொள்ளலாம் அல்லவா!

எனவே, முடிந்தவரை முயலுவோம். தெரிந்தவரை சிறந்த ஆட்டத்தை ஆடுவோம். அதையும் அழகாக, அனைவரும் ரசிக்கத் தகுந்த முறையில் ஆடுவோம் என்ற மனப்பாங்குடனேயே ஆட வேண்டும்.

கால்பந்தாட்டம் கற்பதற்கு எளிமையான ஆட்டம். காண்பதற்கு இனிமையான ஆட்டம். கற்க விரும்புவோருக்கோ இது முக்கனித்தோட்டம்.

பரந்துபட்ட ஆடுகளத்தில் பலபேருடன் கூடி, ஆடி பந்தைப் பரிமாறிக் கொண்டு விளையாடுகின்ற இந்த இன்பத்தை, எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் மனதிலே புத்துணர்ச்சி பொங்கி எழ வேண்டும். வாலிபர்கள் செயலிலே பேரெழுச்சி ஏற்பட வேண்டும். பொதுமக்கள் உள்ளங்களில் மறுமலர்ச்சியும் மான உணர்ச்சியும் பெருகி, நம்மவர்கள் நாடெங்கும் சென்று நன்றாக ஆடி, வெற்றிக்கொடி நாட்டி வீறுநடை போட்டுத் திகழ வேண்டும் என்ற ஆர்வ வளர்ச்சியில் திளைக்க வேண்டும்.