பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v

நோன்பு இயற்றியும் வந்தான். அவனுடைய கடுமையான உபாசனை,தேவியின் திருவுளத்தேயும் அவனுக்கு அருளவேண்டும் என்னும் கருணையினை உண்டாக்கிற்று.

தேவி, ஒரு சிறு பெண்ணாக வடிவு எடுத்தாள். இரவின் நடுச்சாம வேளையிலும் கண்ணுறங்காதவனாகத் தியானத்திலே இருந்த அந்த உபாசகனின் முன்னே சென்று நின்றாள். அவள் திருவாயிலே தாம்பூலம் நிறைய இருந்தது. அதனை அவள் மென்றுகொண்டும் இருந்தாள்.

"அன்பனே! நின் வாயைத் திற, இதனை நின் வாயில் உமிழ்கின்றேன். நீ நினைத்த சக்தியை அடையப் பெறுவாய்” என்றாள் தேவி.

அவன் கண்விழித்தான். எதிரே நின்ற சிறுபெண்ணின் வடிவைக் கண்டான். அவள் வாய் நிறையத் தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டிருந்த நிலையையும் கண்டான். 'தன் தவத்தைக் கலைக்கவந்த பெண்’ என்று தவறாகக் கருதி மயங்கினான். அவளைக் கடிந்து வெருட்டவும் முற்பட்டான்.

"ஏடீ, சிறு பெண்ணே! என்னிடம் வந்து என் தவத்தைக் கலைத்து, என்னைக் கெடுக்கவோ நினைத்தனை. உடனே இங்கிருந்து அகன்று போய்விடு. இன்றேல், நான் என்ன செய்வேனோ எனக்கே தெரியாது’ என்று கூச்சலிட்டான்.

நிறைவான அறிவு பெறுவதற்கு உரிய நற்காலம் அவனுக்கு வரவில்லை என்பதைத் தேவி அறிந்தாள். தான் கொண்ட அந்த வடிவுடனேயே திரும்புவாளானாள். வழியிலே ஒரு மண்டபத்தே உறங்கியிருந்த வரதனைக் கண்டாள். அவனுடைய நல்லூழ் அவள் நினைவிற்பட்டது. அவன் அருகே சென்று, அவனைத் தட்டி எழுப்பினாள்.

அருள் பெற்றான்

'இன்று எனக்குக் குடவரிசைப் பணி உளது. இரவில் வீடு திரும்புவதற்கு நெடுநேரமாகும். தங்கள் பணி முடிந்த பின், அம்மன் கோயில் மண்டபத்தே எனக்காகக் காத்திருங்கள். நானும் அங்கே வருகிறேன். இருவரும் ஒன்றாகவே வீட்டுக்குப் போய்விடலாம்' இப்படிச் சொல்லியிருந்தாள், அன்று மாலை மோகனாங்கி.

அவள் விருப்பப்படியே, தம் பணி முடிந்ததும், மண்டபத்தே சென்று வரதர் அவளுடைய வருகையை எதிர் பார்த்தபடி காத்திருந்தார். அங்கேயே படுத்து அயர்ந்து உறங்குபவரும் ஆயினார்.

மோகனாங்கி தான் சொன்னபடியே மண்டபத்திற்கு வந்தாள். அவர் உறங்கிக் கிடப்பார் என்று நினையாத அவள்.