பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 87 திரண்டிமை யோர் தொழும் தென்னரங் கேசர்முன் செங்கைகளா றிரண்டுடை யோனும் எதிர்சென்ற தாலெதிர்ந் தார்தமைக்கண் டருண்டெழு மைவார்க்குத் தேரூர் பவன்கொள் அணைவெருண்டு புரண்டொரு புற்றைக் கடந்தொரு புற்றிற் புகுந்ததுவே. (132) கூட்டங் கூட்டமாகத் தேவர்கள் திரண்டு சென்று போற்றுகின்ற சிறப்புடையவர் அழகிய திருவரங்கப் பெருமான். அவருடைய திருமுன்பாகச் செங்கைகள் பன்னிரண்டு உடையோ னாகிய முருகப்பெருமானும் எதிரிட்டுச் சென்றன. அங்ங்னம் குமரப்பெருமான் சென்றதனாலே பகைவரைக் கண்டு அஞ்சி எழுந்த பஞ்சபாண்டவர்க்குத் தேரூர்ந்தவனாகிய திருமால் பள்ளிகொள்ளுகின்ற பாயலாகிய பாம்பு, எதிர்ப்பட்டமுருகனைக் கண்டு, அவன் வாகனமாகிய மயிலுக்குப் பயந்து, இருந்த இடத்தை விட்டுப்புரண்டு, ஒரு புற்றைக் கடந்து, மற்றொரு புற்றினிற் சென்று புகுந்து ஒளிந்துகொண்டதே! குறிப்பு - மாயவனை விட்டுவிட்டுத் தனக்குப் பாதுகாவலான இடத்தைத் தேடியதாகச் சிவபெருமானின் திருச் சடையினிற் சென்று அடைந்தது என்பது கருத்து. சங்கநாதம் அழகர்கோயில் மதுரைக்கு அருகே இருப்பது. அங்கே கோயில் கொண்டிருக்கும் திருமாலைக் குறித்துப் பாடிய செய்யுள் இது. பெருமான் பாரதப் போர்க்களத்திலே பாஞ்சசன்னியத்தை முழக்கியதனை வியந்ததும் இது. சதுரங்கர் சங்கத் தழதர் செங்கைச் சங்கை அதரமிசை வைத்திலரே யாயின்-முதலை வருங்களத்தின் முண்டகக்கை வைப்பரன் றேயன்று பொருங்களத்தில் நூற்றுவர்முன் போய். (133) சதுரப்பாட்டினை உடையதான திருவரங்கத்தே இருப்பவரும், சங்கினைக் கைக்கொண்டோருமான அழகராகிய பெருமான், தன் செங்கையிலே இருந்ததான சங்கினை எடுத்து உதட்டிடத்தே வைத்து முழக்காதிருந்தனர் என்றால், அன்று போரிடற்காகக் கூடிய குருசேத்திரமாகிய களத்திலே, நூற்றுவர்களான துரியோதனாதியருக்கு முன்பாக ஒடிப் போய், முதல்வரான ஐவர்களும் களத்திலேயே தலையில் தம்முடைய கைகளைக் குவித்து வைத்தவாறு பணிந்து நிற்பார்கள் அல்லவோ? அவர்கள் தோல்வியுற்றிருப்பார்கள் என்பது கருத்து.