பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

அவரைக் காணாமையால், அவர் வீட்டிற்கே போயிருப்பார் எனக் கருதித் தானும் சென்றுவிட்டாள்.

கோயிலாரும், குடவரிசை முடிந்தபின், கோயிற் பெருங் கதவை மூடித் தாளிட்டு விட்டனர்.

அந்த நிலையிலேதான், தேவி அவரிடத்தே சென்றனள். வரதரை எழுப்பி, 'வாயைத் திற' என்றதும், அவர் வாய் தானாகவே எவ்வித மறுப்புமின்றித் திறந்து கொண்டது. தேவியும் தன் வாயின் தாம்பூலச் சாற்றை அவர் வாயில் உமிழ்ந்துவிட்டுச் சென்றாள்.

அந்தக் கணமே, வரதராகிய பரிசாரகரின் உள்ளத்தில் பெரியதொரு உத்வேகம் எழுந்தது. கடல் மடைதிறந்தாற் போன்று அவர் கவிமழை பொழியலானார்; அவருடைய அந்தப் புதிய சக்தியை நினைந்ததும், அவருக்கே வியப்பாக இருந்தது. தேவியின் கருணைப் பெருக்கை எண்ணி அவளைப் பாமாலையால் போற்றினார்.

காளமேகம் ஆயினார்

பொழுது விடிந்ததும், பழைய பரிசாரகராக வரதர் இல்லை. முத்தமிழ் தவழ்ந்துவரும் செஞ்சொற் கவிஞராக அவர் விளங்கினார். தம் அன்புக் காதலியிடம் சென்று தம்முடைய கவித்திறனைக் காட்டினார். தேவியின் திருவருளையும் விளக்கமாக உரைத்தார். அவளும் அதனைக் கேட்டதும், தேவியின் திருவருளைப் போற்றிப் பேரின்ப வயத்தினளாயினாள்.

அன்று முதல், ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் பொழியும் காளமேகமாக ஆயினார் வரதன். தமக்கு அருள்பாலித்த தேவியின் கருணைக்கு நன்றியாகத் திருவானைக்கா உலா என்னும் அரியதொரு பிரபந்தத்தைச் சொற்சுவையும் பொருட் சுவையும் மிளிரும்படியாக இயற்றினார். உலாவின் இனிமை அறிவுடையோரை ஆட்கொள்ள, அன்று முதல் அனைவரும் கவி காளமேகம் என்றே அழைக்கலாயினர்.

தல யாத்திரை

திருவானைக்காவிலே தம் அன்பிற்கு உரியவளான மோகனாங்கியுடன் சில காலம் இன்புற்று இருந்த பின்னர் தமிழகம் முழுவதும் சென்று தம் கவிதை வெள்ளத்தைப் பரப்பி வர வேண்டும் என்னும் பேரவா இவருக்கு எழலாயிற்று. அதனால், அவளிடத்தே பிரியாவிடை பெற்றுத் தமிழ் நாடெங்கணும் காளமேகம் செல்வாராயினார்.

செல்லும் இடங்களில் எல்லாம் கவிமழை பொழிந்து, தமிழகம் முற்றும் தம்மைப் போற்றப் புகழ்க் கொடியும் நாட்டினார். பின்னர், மீண்டும் திருவானைக்காவிற்கே வந்து மோனாங்கியுடன் இன்பமாக வாழ்ந்திருந்தார்.