பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ix

கண்ட சாட்சி

பல நாட்கள் நடந்து, பல ஊர்களையும் கடந்து, ஒரு நாள் காலை வேளையிலே திருமலைராயன் பட்டினத்தை அடைந்தார் காளமேகம். அந்த ஊரின் வளமையைப் பறைசாற்றுவன போல மாடிவீடுகள் இருபுறமும் வானத்தைச் சென்று முத்தமிட முயல்வன போலத் திகழ்ந்த ஒரு தெரு வழியே அவர் சென்று கொண்டிருந்தார். ஒரு பெரிய ஊர்வலம் அப்போது எதிரே வந்து கொண்டிருந்தது.

மங்கல பேரிகைகள் ஜாம் ஜாமென்று முழங்க, சுற்றிலும் மக்கள் ஆரவாரத்துடன் வாழ்த்திப் போற்ற, ஆடம்பரமாக அலங்கரிக்கப் பெற்ற பல்லக்கு ஒன்றிலே அமர்ந்தபடி, அதிமதுரக் கவிராயர் அந்த ஊர்வலத்தின் நடுநாயகமாக வந்து கொண்டிருந்தார். அவரைத் தொடந்து அறுபத்து மூன்று பல்லக்குகளிலும் புலவர்கள் அமர்ந்து வந்தனர். கட்டியக்காரன், 'அதிமதுரக் கவிராய சிங்கம் பராக்' என்று கூறி வர, அந்த முழக்கம் அனைவராலும் தொடர்ந்து முழக்கப் பெற்ற முழக்கொலி வானதிர எழுந்து கொண்டிருந்தது.

தமிழ்வாணர்கள் செல்லும் தகவுடைய அந்தப் பெருமிதத்தைக் கண்ட கவிஞரின் உள்ளம் பூரிப்படைந்தது. திருமலைராயனின் தமிழார்வத்தை உள்ளத்தாற் போற்றினார். 'தமிழறிந்தாரின் நல்வாழ்வே தமிழின், தமிழரின் நல்வாழ்வாகும்’ என்பதனை உணர்ந்து, செயலிலேயும் அதை நிறைவேற்றி வந்த திருமலைராயனின் செயல் அவரைப் பெரிதும் ஆட்கொண்டது. நடுத்தெருவில் தம்மை மறந்தவராக மெய்மறந்து நின்று கொண்டிருந்தார் காளமேகம்.

எதிர்பாராத சம்பவம்

கட்டியக்காரர்களுள் ஒருவன், தமிழ் மயக்கத்தால் மெய் மறந்து நின்ற காளமேகத்தைக் கண்டான். அனைவரும் முழக்கும் அதிமதுரக் கவிராய சிங்கத்தின் புகழ் வாசகத்தை அவர் கூறாது நிற்பதறிந்து வெகுண்டான். அவரருகே சென்று, தன் கைத்தடியினாலே தட்டி, அவர் மயக்கத்தைக் கலைத்து, "நீயும் கவிராயரைப் புகழும் முழக்கத்தைப் பிறருடன் முழக்குவாயாக' என்றான்.

காளமேகம் வெகுண்டார். எனினும் நோவ வேண்டியது அவனையன்று என்பதனை அறிந்த அவர்,

அதிமதுர மென்றே அகிலம் அறியத்
துதிமதுர மாயெடுத்துச் சொல்லும்-புதுமையென்ன
காட்டுச் சரக்குலகிற் காரமில் லாச்சரக்குக்
கூட்டுச் சரக்கதனைக் கூறு.