பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xi

அப்போது திருமலைராயன் வீற்றிருந்த சிம்மாசனமே ஒருபுறமாக வளர்ந்து பெருகிற்று. பெருகி வளர்ந்த அந்தப் புறத்தே சென்று கம்பீரமாக அமர்ந்து கொண்ட காளமேகம், தமக்குத் துணை செய்த கலைவாணியை மீண்டும் போற்றினார். கண்டோர் அனைவரும், அவருடைய தெய்வீக சக்தியைக் கண்டு, எதுவும் சொல்லுவதற்கு வாயெழாமல் திகைப்புற்றிருந்தனர்.

காளமேகமோ அங்கிருந்த புலவர்களைச் சுட்டி, 'நீவிர் யாவரோ?' என்று மிகவும் கனிவாகக் கேட்டனர். அவர்கள் ‘யாம் கவிராயர்கள்’ என்றனர். 'கவிராயர்’ என்ற பதத்தினைக் 'குரங்குகள்’ என்று பொருள் கொண்டு காளமேகம் கேலியாக உரையாடப் புலவர்கள் பெரிதும் சீற்றங் கொண்டனர்.

'நீவிர் யாவரோ?' என்று அவர்கள் கேட்க, இவர் 'யாமே காளமேகம்' என, அதனைக் 'கார்மேகம்' எனப் பொருள் கொண்டு அவர்களும் ஏளனம் செய்தனர். அதனைக் கேட்டதும் கவி பாடுதலில் தாம் காளமேகம் என்று ஒரு செய்யுளைக் கவிஞர் சொல்லினர்.

அதிமதுரக் கவிராயர், 'எம் போல் நீவிர் விரைவாகக் கவி பாட வல்லிரோ? என்னும் பொருள்பட, 'மூச்சு விடு முன்னே' என்ற செய்யுளைச் சொல்லக் காளமேகம் 'அதனினும் விரைவாகப் பாடுவோம்' என்று பொருள்படும் 'அம்மென்னும் முன்னே' என்ற செய்யுளைச் சொல்லினர்.

அரிகண்டம்

காளமேகத்தின் செயலினால் சினம் மிகுதியாகப் பற்றித் தம்மை எரிக்க, அதிமதுரம், 'நீர் அரிகண்டம் பாடி எம்மை வெற்றி பெற இசைகின்றீரா?' என்றனர்.

'அரிகண்டமோ? அதன் முறைமை எப்படியோ? சொன்னால், யாம் அதன் பின் எம் இசைவைச் சொல்வோம்’ என்றனர் காளமேகம்.

“கழுத்திலே கத்தியைக் கட்டிக் கொள்ள வேண்டும். கேட்கும் குறிப்புப்படி உடனுக்குடன் செய்யுள் சொல்ல வேண்டும்; சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப்பிழை இல்லாமலும் இருக்க வேண்டும். பிழை பட்டால் கழுத்து வெட்டப்படும்; வென்றால் பாராட்டப் பெறுவார்கள்” என்று விளக்கினார் அதிமதுரம்.

அதனைக் கேட்டுக் காளமேகம் கதி கலங்கிப் போவார் என்று எதிர்பார்த்த அதிமதுரம் திடுக்கிட, 'அரிகண்டம் ஒரு பெரிதோ? யாம் எமகண்டமே பாடி உங்களை வெல்வோம்’ என்று காளமேகம் முழங்கினார்.