பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiii “எம்மைப் பாடுவீரா? எனக் கேட்கும் நீர்தாம் அங்ங்னம் பாட வல்லிரோ?” என்றார்.

காளமேகம் அதற்கு இசையவே, திருமலைராயன் போட்டிக்கான ஏற்பாடுகளை எல்லாம் விரைவாகச் செய்தான். போட்டி பற்றிய செய்தி நாற்றிசையும் பரவிற்று. திருமலைராயன் பட்டினத்தே நிகழும் அந்த வைபவத்தைக் கண்டு களிப்பதற்கெனப் பெரியதொரு புலவர் கூட்டமும் வந்து திரண்டது.

போட்டியும் தொடங்கிற்று. அதிமதுரமும் அவரைச் சேர்ந்த தண்டிகைப் புலவர்கள் அறுபத்து நால்வரும் பற்பல குறிப்புகளைக் கொடுத்தனர். அவற்றுக்கு எல்லாம் ஏற்ற செய்யுட்களைச் சொல்லியபடி கம்பீரமாக வீற்றிருந்தார் காளமேகம். போட்டியில் அவர் வெற்றிபெற்றார் என்றும் அறிவித்தனர்.

பேர்ட்டியில் வெற்றி பெற்ற பின்னரும், அவரைப் போற்றி உபசரியாது அலட்சியப்படுத்தினான் திருமலைராயன். தன் அவைப் புலவர்களை அவர் அவமானப் படுத்திவிட்டார் என்ற நினைவே அவன்பால் நிரம்பி நின்றது.

காளமேகம் அரசனின் செயலைக்கண்டு மனங்குமுறினார். இவர் கவிதையுள்ளம் கனலும் உள்ளமாயிற்று. அவ்வூர் அப்படியே அழியுமாறு வசை பாடினார். தாம் விரும்பி வந்த முத்துகளையும் மறந்து வெளியேறினார். பல இடங்கட்கும் சென்று மீண்டும் திருவாரூர் வந்து தியாகராசப் பெருமானை வழிபடுபவராகச் சில நாட்கள் அவ்விடத்தே தங்கியிருந்தார்.

மண் தின்ற பாணம்

அப்படித் தங்கியிருந்த நாளிலே, அதிமதுரக் கவிராயரும் திருவாரூர்ப் பெருமானைத் தரிசிக்க வந்திருந்தார். பெருமானைப் போற்றிச் செய்யுள் செய்ய நினைத்த அவர் “நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம் பாணந்தான்", என்று தொடங்கி, மேலே முடிக்கும் வகையறியாதவராய் மதிற்சுவரில் எழுதி விட்டுச் சென்றிருந்தார்.

பிற்றைநாள் வந்தவர், தம் செய்யுள் முடிக்கப் பெற்றிருந்ததைக் கண்டதும் வியந்து நின்றார்.

நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம்
பாணந்தான் மண்தின்ற பாணமே-தானுவே
சீராரூர் மேவும் சிவனேநீ யெப்படியோ
நேரார் புரமெரித்த நேர்.

என்ற அந்தச் செய்யுளின், 'மண் தின்ற பாணம்’ என்ற வாசகம் அவரை அப்படியே மெய்ம்மறக்கச் செய்தது. அதனை எழுதியவர் காளமேகமே என்று அறிந்த அவர், அவர் புலமைச் செறிவை