பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காளமேகப் புலவர்

தமிழ்ப் புலவர் பலருடைய வாழ்க்கை வரலாறுகள், ஓரளவிற்குச் சுவையான புனைகதைகளைப் போலவே நம் நாட்டில் நிலவி வருகின்றன. வியத்தகு கற்பனை நிகழ்ச்சிகளோடு கலந்து, ஒரு வகைத் தெய்வீக இணைப்புடனே அவை வழங்குகின்றன. 'கவிதை நயத்தையும், அக்கவிதைகள் காட்டும் பொருள் வளத்தையும் தெய்வீகச் சிந்தனைகளோடு சேர்த்தே நாம் அறிந்து உணர வேண்டும்' என்ற உயரிய நினைவே இவற்றுக்குப் பெரும்பாலும் காரணமாக இருக்கலாம்.

புலவர் வரலாறுகளைப் பற்றிய வரை, நிலையானவொரு பகுதியாக இன்னொன்றும் விளங்கி வருகிறது. அது, அவர்கள் காலத்தையும் வரலாற்றையும் பற்றி அறிஞரிடையே நிகழும் வாதப் பிரதிவாதங்கள். இந்த இரு வகையான பொது அம்சங்களிலும் காளமேகப் புலவரின் வரலாறும் எள்ளளவும் குறைந்துவிடவில்லை. அதனை ஒரளவிற்குச் சுருக்கமாக நாம் முதற்கண் காண்போம்.

திருக்குடந்தைப் பகுதியிலே, வடமரான பிராமணர் மரபிலே தோன்றியவர் இவர் என்பர். அவ்வூரிற் பிறந்த சோழியப் பிராமணர் என்றும் சிலர் உரைப்பர்.

நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாகத் திகழ்வது பாண்டி நாட்டுத் 'திருமோகூர்’ என்னும் தலம். அந்தத் தலத்திலே கோயில் கொண்டிருக்கும் பெருமாளுக்குக் 'காளமேகப் பெருமாள்' என்று பெயர். அந்தக் கோயிற் பரிசாரகராயிருந்த ஒருவருடைய மகனார் இவர் எனவும் சிலர் உரைப்பர். இவர் மோகூர்ப் பெருமாளைப் பாடியிருப்பதனையும், அப்பெருமாளின் பெயரும் காளமேகமாக இருப்பதனையும் இக் கருத்திற்குச் சான்றாகவும் அவர்கள் காட்டுவர்.

இவர்களுடைய கருத்துப்படி 'காளமேகம்' என்பது இவருடைய இயற்பெயரே ஆகின்றது. மற்றையோர் இதனை ஏற்பதில்லை. தேவியின் அருளினாலே ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வ்கைக் கவிதைகளையும் கார்மேகத்தைப் போலப் பொழிதலைத் தொடங்கிய பின்னரே இப்பெயர் இவருடைய சிறப்புப் பெயராக அமையலாயிற்று என்பார்கள் அவர்கள்.