பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ii

வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
வீசு கவிகாள மேகமே - பூசுரா
வீண்தின்ற வெவ்வழலில் வேகுதே பாவியேன்
மண்தின்ற பாணமென்ற வாய்.

என்ற செய்யுளை அதிமதுரகவி செய்தனர். இதன் முதல் அடியில் குறிப்பிடப்பெறும் வரதா என்ற சொல்லைக் கொண்டு, அதுவே இவருடைய இயற்பெயராகலாம் என்பர் திரு.மு. இராகவய்யங்கார் அவர்கள்.

இவருடைய இளமைப் பருவம் எத்தகைய சிறப்பும் இன்றிக் கழிந்திருக்க வேண்டும் என்றே கொள்ளலாம். இவர், பிற்காலத்துப் பரிசாரகத் தொழிலில்அமர்ந்திருந்ததனை எண்ணினால், அவ்வாறு கருதுவதற்கு இடமும் உண்டாகின்றது.

பரிசாரகர் வரதன்

வரதன், தமக்கு வயது வந்ததும், தமக்கு ஏற்ற ஒரு பணியினை நாடித் தம் ஊரினின்றும் வெளியேறிவிட்டார். பலவிடங்கட்கும் சென்று வேலை தேடித் திரிந்தவர், இறுதியில் திருவரங்கத்துப் பெரியகோயிலை அடைந்தார். அங்கு, அவருக்குப் பரிசாரகர் வேலைதான் கிடைத்தது.

கோயில் மடைப்பள்ளி அலுவல்களில் இந்தப் பரிசாரகர் பணியும் ஒன்று. உணவு அங்கேயே கழிந்துவிடும். கிடைக்கிற சிறு ஊதியம் மிச்சம். அதனால் வரதன் நிம்மதியாக அவ்வேலையில் இருந்தார். இருந்தாலும், அவருடைய கட்டிளமைப் பருவம், அப்படி நிம்மதியுடன் நிரந்தரமாக இருக்குமாறு அவரை விட்டுவிடவில்லை. விதி, அவரை ஆட்டிப்படைக்கத் தொடங்கிற்று.

மோகனாங்கியின் தொடர்பு

திருவரங்கம் பெரியகோயில் ஒரு பிரசித்தி பெற்ற திருமால் திருப்பதி. அதனருகே, சிறிது தொலைவிலே திருவானைக்காத் திருக்கோயில் உள்ளது. இது பிரபலமான சிவன்கோயில் சம்புகேசு வரராகச் சிவபிரான் இங்கே கோயில் கொண்டிருக்கின்றார்.

சம்புகேசுவரர் கோயிலும் ஒரு பெரிய கோயில். இங்கேயும் பணியாட்கள் மிகுதியாக இருந்தனர். இறைவனின் முன்பு ஆடியும் பாடியும் தொண்டு செய்து வருவதை மரபாகக் கொண்ட தேவதாசியர் பலரும் அந்நாளில் இந்தக் கோயிலில் இருந்தனர். அவர்களுள் மோகனாங்கி என்பவளும் ஒருத்தி. இவள் நல்ல அழகி, நடனத்திலும் வல்லவள்.

அழகு கொஞ்சிக் குடிகொள்ளும் இளமைப் பருவமும் மோகனாங்கிக்கு அப்போது அமைந்திருந்தது. இயல்பிலேயே