பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iii

அழகியான மோகனாங்கிக்கு, இளமைப் பருவத்தின் செழுமையான பூரிப்பு மேலும் அதிகமான கவர்ச்சியை அளித்தது.

அவளைக் கண்டதும் வரதன் அவள்பால் மையல் கொண்டனர். அவளை அடைவதற்கும் முற்பட்டனர். அவளும் அவருடைய அழகிலே மயக்கமுற்றாள். அவர் கருத்திற்கும் இசைந்தாள். இருவர் வாழ்வும் ஒன்றாகிக் கனிந்து, அளவற்ற இன்பநாதத்தை ஒலித்துக் கொண்டிருந்தது.

வரதன், ஒரு பெருமாள் கோயில் பரிசாரகர், மோகனாங்கி, ஒரு சிவன் கோயில் தாசி. அவர்களின் உறவு சைவர், வைணவர் ஆகிய இருந்திறத்தாராலும் வெறுக்கப்பட்டது. ஆனால், அதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் உள்ளம் ஒன்று கலந்து விட்டபின், உலக விவகாரங்களை நினைப்பதற்கு அங்கு இடமே இல்லை.

கேலியும் ஊடலும்

ஒரு சமயம், மார்கழி மாதத்தில், சம்புகேசுவரர் கோயிலில் திருவெம்பாவைப் பாராயணம் நடந்து கொண்டிருந்தது. கோயில் தாசிகள் பலரும் கூடி இனிமை ததும்பப் பாடிக் கொண்டிருந்தனர். 'உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்' என்ற பாடலை அவர்கள் பாடத் தொடங்கினார்கள்.

‘எம்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க', என்ற அடியினைப் பாடுவதற்கு இயலாதபடி மோகனாங்கி திணறினாள். எப்படி அவளால் பாட முடியும்? அவள் உறவு கொண்டிருப்பதோ ஒரு வைணவருடன். ஆகவே, அவள் மனம் சஞ்சலத்தில் சிக்கிக் கொள்ள, அவள் செயலற்று நின்றுவிட்டாள்.

இயல்பாகவே அவள் கொண்டிருந்த பொருத்தமற்ற உறவினை வெறுத்து வந்த அந்தப் பெண்கள், மோகனாங்கியைச் சுட்டி, அப்போது வெளிப்படையாகவே பழிக்கத் தொடங்கி விட்டனர். ‘எப்படியடீ உன்னால் பாடமுடியும்?' என்ற அவர்களின் ஏளனமான கேள்வி மோகனாங்கியை வாட்டி வதைத்தது.

மோகனாங்கி சிலையானாள். அவள் தோழியர் கும்மாளமிட்டனர் கைகொட்டிச் சிரித்தனர். அவர்களின் குறும்புகளால் அவளது வேதனைத் தீ சுவாலையிட்டு எரியத் தொடங்கிற்று. தூய சிவபக்தி அவளை அப்போது ஆட்கொள்ள, அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாகத் தன் வீட்டை நோக்கி விரைந்து நடந்தாள்.

மூடிய கதவம்

“வாயிற் கதவைச் சார்த்திவிடு; வரதர் இன்றிரவு வந்தால் உள்ளே நுழைவதற்கு இடம் தரவேண்டாம், சிவன் கோயில் தாசியாகிய நான், வைணவரான அவருடன் திருவரங்கத்துக்