பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv


கோயில் பரிசாரகரான அவருடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்த உறவு அனைத்தும் இன்றோடு முடிந்தது” என்று தன் வேலைக்காரியிடம் கூறிவிட்டுப் படுக்கையில் படுத்தும் உறக்கங் கொள்ளாமல் தான் செய்த சிவ அபசாரச் செயலை நினைத்து வருந்தியவளாகத் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் மோகனாங்கி.

வழக்கம்போல் வரதன் வந்தார்."மோகனா’ என அன்புடன் அழைத்தவாறே கதவைத் தட்டினார். கதவு மெல்லத் திறந்தது. வேலைக்காரி எதிரே நின்றாள். தன் தலைவியின் நிலையைச் சுருக்கமாகச் சொல்லி விளக்கினாள்.

வரதன் நிலைகலங்கினார். தம்முடைய உறவுக்கு இடையூறாகத் தம் மதக்கொள்கை இருப்பதை நினைத்தார். ஒரு முடிவுடன் விரைந்து சென்றார். அந்த முடிவுக்கு வந்ததுமே அவர் முகம் தானாக மலர்ந்தது. அவரிடம் புதியதொரு மிடுக்கும் எழுந்தது. அவர் நடையிலே என்றும் இல்லாத ஒரு விரைவும் காணப்பட்டது.

அன்பின் ஆற்றல்

மறுநாள் பொழுது விடிந்ததும் வரதன் சம்புகேசுவரர் கோயிலை நாடிச் சென்றார். தாம் சிவசமயத்தை ஏற்றுக் கொள்வதற்கு விரும்புவதாகக் கூறினார். அவருடைய முடிவைக் கேட்டு அங்கிருந்தோர் அதிசயித்தனர். ஆனாலும், வைணவர் ஒருவர், தாமே வலிய வந்து சிவநெறியை ஏற்க விரும்புவதை மகிழ்வுடன் வரவேற்றனர். அவருக்குச் சிவதீட்சை செய்து வைத்துச் சிவசமயத்திற் சேர்த்துக் கொள்வதற்கான சடங்குகளையும் உடனே செய்து வைத்தனர். வரதன் சைவசமயி ஆயினார். அவரைச் சம்புகேசுவரர் கோயிற் பரிசாரகராகவும் அவர்கள் நியமித்தனர்.

சிவ சின்னங்கள் உடல் முழுவதும் பொலிவுடன் விளங்கத் தம் அன்புடையாளைக் காணச் சென்றார் வரதன். அவள் கொண்ட ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. அகமும் முகமும் மலர அவரை வரவேற்று உபசரித்தாள். தனக்காக அவர் சைவராக மாறின செயல், அவள் உள்ளத்தே நிரம்பி நின்றது. அவரை ஆர்வத்துடன் தழுவி, அவரது காதலன்பின் பெருமைக்கு அடிமையாகிப் போற்றி இன்புற்றாள். வரதனும் கவலை தீர்ந்தவராகிக் களிப்பிலே திளைத்திருந்தார்.

தேவி உபாசகன்

தேவி உபாசகன் ஒருவன் தனக்கு நிறைந்த புலமையைத் தந்தருளுமாறு ஒரு சமயம் தேவியை வேண்டுவானாயினான். திருவானைக்காவிலே, சம்புகேசுவரரின் தேவியாகக் கோயில் கொண்டிருக்கும் அம்பிகையின் திருமுன்னே, இரவு பகலாக