பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

காளிதாசன் உவமைகள்


முழு நிலா நீல வானிலிருந்து நம்மேல் தன் அமுதுக் கதிர்களைப் பொழிகிறான். அந்நிலவின் இன்பத்தில் நிலவில் உள்ள மறுவைப்பற்றி எவரேனும் நினைக்கிறார்களா? அதைக் காண்கிறார்களா? இல்லையே.

அதுபோல், நற்குணங்கள் நிறைந்து குவிந்த இடத்தில் ஒரு குறை இருந்தால் அது அக்குணத்திரளில் மறைந்து போகும். கு. 1:3

ழைக்கால முகில் இனிய, ஒலி ஒளியுடன் செல்கிறது. முகிலி மனைவியாகிய மின்னல் இணைந்து செல்கின்றது. மழை பொழிந்து மக்களையும், பயிர், செடி கொடி மரங்களையும், விலங்கு பறவைகளையும், மகிழ்வித்து அவை செல்கின்றன. மழை ஓய்ந்ததும் வானவில் தோன்றுகிறது.

திலீபனும் சுதட்சினையும் இனிய ஒலியுடன் தேரில் காட்டுக்குப் போகும்போது பொருள்களை அள்ளி வீசி அனைவரையும் மகிழ்வித்துக்கொண்டு போனார்கள்.அவர்கள் கடந்ததும், அவர்கள் ஏறிச் சென்ற வண்ணத்தேர் வானவில் போலக் காட்சி தந்தது. ர. 1:39

ழை, கடலிலும் நிலத்திலும் மலையிலும் பெய்கிறது: இடத்திற்கேற்பப் பயன் தருகிறது. கடலில் முத்துச்சிப்பி ஒன்று அங்காந்திருக்கிறது. அதில் மழைத்துளி விழுந்ததும் சிப்பி கருத்தரித்து, உரிய காலத்து ஒளிரும் முத்தை ஈனுகிறது.

ஆசிரியன், மாணவ மாணவியர் பலருக்குப் பல கலைகளைக் கற்பிக்கிறான். பயில்வோருள் ஒரு மாணவன், மாணவி, கலையைத் தன்னிடத்துத் தாங்கி உரிய காலத்து வெளிப்படுத்துகின்றனர்.அதனால் மாணவனோ, மாணவியோ, ஒளிர்கின்றனர். புகுந்த இடத்தின் பெருமையால் கலையும் உயர்கிறது. மா. 1:6

தேவர்கள் பயிர்கள்: இராவணனுடைய கொடுமை பயிர்களுக்கு உண்டான வறட்சி; திருமால், முகில், அவர் உதிர்த்த வாக்கு அமிழ்தம். பயிர் வறட்சியால் வாடியது; மழை பொழிந்தது; நீரால் வாட்டம் மறைந்தது.

தேவர்கள் இராவணனுடைய கொடுமையால் வாடினர். திருமாலின் திருவாக்கால் அவர்களுடைய வாட்டம் மறைந்தது. ர. 10:48