பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காளிதாசன் உவமைகள்

15


ஆங்காங்கு கருங்குவளை மலரும் வெண் தாமரையும் பின்னிக் கட்டப்பட்ட சரம் போலே பெருநீர்த்துளிகள் தோன்றுகின்றன.

ஓர் இடத்தில், பெரு நீர்த்துளிகள் நீர்த்தொகுதி கருநில அன்னங்களும் வெண்ணிற அன்னங்களும் தனித்தனிக் கூட்டங்களாக அமர்ந்தன போலவும், வேறோர் இடத்தில், காரகில் இலையாகிய தரையின் மேல் வெண் சந்தனக் கலவையால் தீற்றிய கோலம் போலவும் தோன்றுகிறது.

இனி, பிரிந்துள்ள யமுனை நீரும் கங்கை நீரும் சிறிது சிறிதாகக் கலக்கின்றன. கங்கையின் நீர் மேலும், யமுனையின் நீர் கீழும் பரவுவது இருள் குடிகொண்ட மரப்பொதும்பரின் இலைகளுடு நிலவு ஒளி உள் புகுவது போன்றுள்ளது. யமுனையின் நீர் மேலும் கங்கையின் நீர் கீழும் பாயும் இடம் நீல வானில் வெண் மேகங்கள் பரவுவன போலத் தோன்றுகிறது.

ஓரிடத்தில், கரும் பாம்பை அணிந்து வெண்பொடி பூசிய சிவபெருமானுடைய திருமேனி போலக் கருநீர்ச் சுழல்கள் வெண்நீர்த்திரளில் காணப்படுகின்றன.

கங்கையின் வெண் நீரினும், யமுனையின் கரு நீர் குறை வேனும் விரைவுடையது. நெடுந் துரம் சென்ற பின் யமுனை கங்கையுடன் இரண்டறக் கலந்து தன் கருமைச் சிறப்பை இழக்கிறது. ர. 151:57


3. இலக்கியம்


முதலில் பாதையை வகுப்பவன் பல இன்னல்களைக் கடந்து முன்னேறுகிறான். அவனுக்குப் பின் செல்வோர் பாதையை விரிவு படுத்தவும். ஒழுங்குபடுத்தவும் முன் சென்றவனுடைய முயற்சியே துணைபுரிகிறது. ஆதி கவி தம் சொல் என்ற துருவு கருவியைக் கொண்டு சூரிய வம்சம் என்கிற வைரத்தில் தொளை இட்டார். தோளாமணியைத் தொளைத்து அணியாக அமைத்தவர் ஆதிகவி. அவ்வாறு தொளையிடப் பட்ட மணியில் என் நூல் எளிதாகச் செல்கிறது.