பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

காளிதாசன் உவமைகள்


திங்களும் ஞாயிறும் மக்களுக்கு நன்மை செய்வன. இரவையும் பகலையும் தருவன. பயிர்கள் வளர உதவுவன. ஆயினும், திங்கள் தாமரைக்குப் பகை; திங்களைக் கண்டால் தாமரை கூம்பும். அஃதேபோல் ஞாயிறு ஆம்பலுக்குப் பகை.

உயர்ந்த பண்புகள் எல்லோராலுமே போற்றப்படும் எனக்கூற இயலாது. ஆனால், அதிதி மன்னனின் குணங்களோ மாற்றார் மனத்திலும் இடம் கொண்டன. பகைவரும் அவனுடைய நற்பண்புகளைக் கொண்டாடினர். ர.17:75

செங்கதிர் ஒளியால் இருள் அகல்கிறது. மக்கள் தத்தம் தொழிலைச் செய்யவும், நெறியை அறியவும் ஒளி உதவுகிறது. ஆனால் ஞாயிறோ மக்களை 'இன்ன செய்’ என்றோ, 'இவ் வழியில் போ' என்று ஆணை இடுவதில்லை.

அரசன் மக்களுக்கு அறிவு புகட்டினான்; அவர்களிடம் உண்மையையே சொன்னான். அவர்களுடைய அக இருள் அகன்றது; பாவங்கள் அழிந்தன. அரசனது ஒழுக்கத்தை மக்கள் அனைவரும் கண்டனர்; அதைப் பின்பற்றி உயர்ந்தனர். ர.17:74

வேனிற் காலத்தில் மாமரம் பூக்கிறது.பூ மணம் உடையது; காமன் அம்புகளில் ஒன்றாகும். பின்னர் பூ மறைந்து பிஞ்சு தோன்றுகிறது. காயாகிப் பழமாகிறது, மணம், சுவை கொள்கிறது. பழம் வந்தபிறகு எவரே பூவைப்பற்றி எண்ணுவர்? பூவே பழம் ஆயிற்று என்று கூட எண்ணுவதில்லை.

இரகு திலீபனிடமிருந்து தோன்றியவனே; எனினும், இரகு என்னும் பழம் கிடைத்ததும், அவனுடைய உயர்ந்த பண்புகளால், தந்தை திலீபனாகிய பூவை அந்நாட்டு மக்கள் மறந்து விட்டனர். ர.4:9

பழங்கள் நிறைந்த மரம் வளைந்து வணங்கி நிற்கிறது. நீர்நிரம்பிய முகில் விண்ணில் தாழ்ந்து வருகிறது. ஒரிடத்திலேயே இருக்கும் தாவரம் மரம்; பல இடங்களில் விருப்பப்படி திரியும் பொருள் முகில் இரண்டும் தம்மிடமிருந்து உதவி பெறுவோருக்குத் தாழ்ந்து எளிதாகின்றன நல்லோருக்குச் செல்வம் கிடைத்தால் அவரது பெருமை பணிவால் வெளிப்படும்; பணிவே பெருமைக்கு அணிகலன்.