பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காளிதாசன் உவமைகள்

5


கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர் மரம் தன் நலத்தைக் கருதுவதில்லை. தன்னை அண்டினோருடைய நலத்திற்காகத் தான் துன்பத்தை ஏற்கிறது. கோடையின் வெப்பத்தைத் தலையில் தாங்கித் தன் நிழலைத்தன் அடியில் இருப்பவர்களுக்குத் தருகிறது.

அரசனும் தன் இன்பத்தைக் கருதாமல் தன் நிழலில் வாழும் மக்களின் துன்பத்தைத் தலையில் ஏற்றுக்கொள்கிறான். சா. 5:7

மேகங்கள் கடல் நீரை மொண்டு செல்கின்றன. பல திசைகளிலும் சென்று மழையாகப் பொழிகின்றன. ஆதலால் முகில் வள்ளல்கள் எனப் புகழ்கின்றனர். ஆனால் முகில்களை வள்ளலாக்கியது கடல் என்பதை எவரேனும் நினைக்கிறார்களா?

திதி என்ற அரசனைப் பல வறிஞரும் புலவரும் அடைந்தனர். அவனின் கொடையால் தாம் பெற்ற பொருள்களைத் தம் ஊருக்குத் திரும்பியபின், பிறருக்கு வரையாது தந்து, வள்ளல் தன்மையை அடைந்தனர். அவர்களிடம் பொருள் பெற்றோர் அப்பொருளுக்கு முதற் காரணர் அதிதியையே மறந்து விட்டனர். ர.17:7

ரிய காலம் வந்ததும் பாம்பு இயற்கையாகவே சட்டை உரிக்கிறது. அப்போது அதன் தோலே அதற்கு சுமையாகத் தோன்றும். சொரசொரப்புள்ள இடத்தில் நுழைந்து அச்சுமையை நீக்கிக்கொள்ளும். தோல் உரித்த பின் பாம்பு பளபளப்புடன் ஒளி தரும் உரித்த சட்டையை அது மறுபடியும் ஏற்காது.

ரகு வானப்பிரத்த வாழ்க்கைக்கு உரியகாலம் வந்ததும் தன் அரசைத் துறந்து காட்டுக்குச் செல்கிறான். அவன் மகன் எவ்வளவு வேண்டிக்கொண்டும் துறந்த அரசைத் திரும்ப ஏற்கவில்லை. வானப்பிரத்தத்தில் அவனுக்குப் புதிய அமைதியும் ஒளியும் உண்டாயின. ர. 8:13

வேம்பு, அரசு, ஆல் போன்ற மரங்கள் பொருத்தமான நிலம் பெற்று வேர் ஊன்றி வளர்ந்தபின் அவற்றை கிள்ளிக் களைய முடியாது; வெட்ட வெட்டத் தழைந்து கொண்டே இருக்கும்.