பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

காளிதாசன் உவமைகள்


“யான் இப்பழியைப் பொறுக்கவோ, மீட்கவோ வல்லேன் அல்லேன்” என்கிறான் இராமன். ர. 14:38

அன்று, நீல வானம் முழுதும் ஒளி பரப்பியது திங்கள் இன்றோ, தேய்பிறை நாள்தோறும் கலைகள் குறைந்து, பெரு விசும்பில் ஒரு மூலையில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

அன்று, கரையைத் திரைக்கைகள் வருட நீர் நிறைந்திருந்தது குளம், இன்றோ, தொலைவில் சேறும் சிறிது பசுமையுமே எஞ்சி இருக்க, அக்குளம் கோடையில் வறண்டு கிடக்கிறது.

அன்று, அகல் விளக்கு சுடர் விளங்கப் பொலிவு தந்தது இன்று, அது எண்ணெய் வற்றித்திரியினின்றும் சிறு பொறிகள் தெரிக்கும் நிலையில் உள்ளது.

உலகம் முழுவதிலும் தன் கலைகளைப் பரப்பி ஒளிபெற விளங்கி, பல மக்களைத் தாங்கிய இரகு வம்சத்தின் இறுதிக் காலம் இது இன்று இரகு வசம் தன் உயிருக்கே ஊசலாடி உளைகிறது. ர. 19:51

மலையின்மேல் ஏறுபவன் குனிந்து தடி ஊன்றி மெள்ள ஏறுகிறான்; மலையினின்று இறங்குபவனோ நிமிர்ந்து செல்கிறான் உயர்பவனுடைய இலக்கணம் பணிவு: தாழ்பவனுடைய இலக்கணம் இறுமாப்பு.

பரசுராமன் விட்ணுவின் ஆறாம் அவதாரம்; தசரத ராமன் ஏழாம் அவதாரம் இருவரும் எதிர்ப்படும்போது, பரசுராமனுடைய வாழ்க்கை இருபத்தியொரு தலைமுறை அரசு களைகட்டு ஒய்ந்த நிலைமையிலும், தசரதராமனுடைய வாழ்க்கை சீதையை மணம் புரிந்து அவளுடன் அயோத்தி சென்று தன் பிறப்பின் பயனை அடையும் ஏறு நிலைமையிலும் இருந்தது. இரு இராமரும் எதிர்த்ததற்கு பரசுராமனுடைய இறுமாப்பு அன்றி வேறு காரணம் இலது.

வெற்றி கொண்ட தசரதராமன் பரசுராமனுடைய திருவடிகளைத் தன் தலையால் தொட்டு வணங்கினான் தோற்றவரிடம் பணிவுடன் நடந்துகொள்வதே வென்றவருக்குப் புகழ் தருவது ர. 11.89