பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

11


பிரபலமாக ஆடப்பட்டு வந்த கிளப்பால் ஆட்டத்திலிருந்து கிளைவிட்டு பிரிந்து, சிறப்பாகத் தோன்றிய ஆட்டமே கிரிக்கெட் என்பதாக ஸ்ரட் (Srutt) என்பவர் குறிப்பிடுவதாக ஆர்கி ரிச்சட்சன் (H. Arche Richardson) எடுத்துக்காட்டுகிறார். ஆனாலும், கிளப் பால் எனும் ஆட்டம் பற்றிய குறிப்பும், எந்த விதமான விவரமும் இன்னும் தெரியாமலே இருக்கிறது என்பதால், இதைப் பற்றி ஒரு முடிவெடுக்காத நிலையில் நின்று போகவேண்டியிருக்கிறது.

அடுத்ததாக, ஸ்காட்லாந்தில் ஆடப்பட்டுவந்த கேட் அண்ட் டாக் (Cat and Doug) என்ற ஆட்டத்தின் அடிப்படையில் தான் கிரிக்கெட்டின் ஆரம்பகாலம் அமைந்தது என்பாரும் உண்டு. ஆனால், கேட் அன்ட் டாக் ஆட்டமானது டிப்கேட் (Tip Cat) என்ற ஆட்டத்தின் வழி வந்தது என்றும் கூறப்படுகிறது. அந்த டிப்கேட் ஆட்டமானது 1688ம் ஆண்டுக்குப் பிறகே நன்கு தெரிய வந்தது என்றும், அதற்கு முன்னரே, கிரிக்கெட் ஆட்டம் இங்கிலாந்து நாட்டில் குடியிருந்த மக்களால் ஆடப்பட்டு வந்திருந்தது. அதற்கான பெயரும் இருந்தது என்று கூறி, கேட் அண்ட் டாக் ஆட்டத்தின் கிளை ஆட்டம் அல்ல இது, என்று மறுதலிப்பாரும் மறுந்துரைப்பாரும் உண்டு.

மூன்றாவதாக, கிரிக்கெட் ஆட்டம் தோன்றுவதற்கும், ஆட்ட அமைப்பு உருவாவதற்கும் ஸ்டூல்பால் (Stool Ball) தான் காரணமாக இருந்தது என்றும் கூறுகின்ற ஆசிரியர்களும் உண்டு. ஆனால், ஸ்டூல்பால் ஆட்டமானது கிரிக்கெட்டுக்குப் பின்னால்தான் தோற்றம் கொண்டது என்றும், கிராமப்புற சிறுவர்கள் ஆடி வந்த ஒருவாறான ஆட்டத்தை ஆட முடியாத பெண்களுக்காக, மென்மையான வடிவில் அமைக்கப்பட்டதே ஸ்டூல்பால் என்றும், ஆகவே, கிரிக்கெட்டிற்குப் பின்னரேதான் ஸ்டூல்பால் தோன்றியது என்றும் கூறி, எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் சில ஆசிரியர்கள்.