பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

29


வேண்டும், அதுவும் நடுவிலே வைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அந்த முடிவினை எடுத்து நிறைவேற்ற மூல காரணமாக அமைந்தது ஹேம்பில்டன் சங்கமே ஆகும். அந்த ஆண்டு 1775 ஆகும்.

1774ம் ஆண்டு தான் கிரிக்கெட் ஆட்டத்திற்கான புதிய விதிமுறைகளை அமைக்க, பழைய விதிமுறைகளை ஏற்றும் மாற்றியும், திருத்தியும் உருவாக்கினார்கள். அந்த விதிகளே இன்னும் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒரு சிலவே மாற்றம் பெற்றிருக்கின்றன.

புதிய விதிகள் உருவாக்கப்பட்டாலும், முக்கியமான ஒன்றை, விதியமைத்த விற்பன்னர்கள் கவனியாது விட்டு விட்டனர். அதாவது ஒரு குழுவிற்கு எத்தனை ஆட்டக்காரர்கள் இருந்து ஆடவேண்டும் என்பதைத்தான். 1884ம் ஆண்டு வரை இந்நிலை நீடித்து வந்தது. 1884ல் மீண்டும் ஒருமுறை எல்லா விதிகளையும் கவனத்துடன் பரிசீலித்துப் பார்க்கையில், விடுபட்டுப்போன இந்த நிலையை உணர்ந்தனர். 11 அல்லது 12 ஆட்டக்காரர்கள் ஒரு குழுவில் இருக்கலாம் என்று ஆடியதையும், அடித்தாடுபவர்கள் (Batsmen) 11 பேர் இருந்தால், தடுத்தாடுபவர்கள் 22 பேர் இருந்து ஆடலாம் என்கின்ற நடைமுறை விதிமுறையையும் மாற்றித் தெளிவாக அமைத்தார்கள்.

இது போன்ற செயல்முறைகளினால் ஹேம்பிள்டன் சங்கம் மக்கள் மத்தியிலே பெருமைமிகு சங்கமாக மதிக்கப்பட்டது. அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. அதனால், கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுத்திடும் உரிமையுடன் சங்கம் முன்னேற்ற நடை போட்டது. ஏறத்தாழ முப்பதாண்டுகள் ஹேம்பிள்டன் சங்கம், இங்கிலாந்து கிரிக்கெட் ஆட்டத்தைக் கட்டிக் காத்தது. கவனித்துக் கொண்டு பீடு நடைபோடச் செய்தது.