பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

39


தென் ஆப்ரிக்காவில்...கூரி கோப்பை (Currie Cup) மேற்கிந்தியத்தீவில்...செல் கேடயம் (Shell Shield) பாகிஸ்தானில்...கோயாடி ஆசாம் (Quad-E-Azam) பிரபல ஆட்டக்காரர்கள் ஆண்டுதோறும் மிகவும் ஆர்வத்துடன் தங்கள் தங்கள் நாடுகளில் போட்டியிடுகின்ற மிகவும் புகழ்பெற்ற வெற்றிக் கேடயங்களாகும். இந்தியாவில் கிரிக்கெட்: இந்தியாவில் கிரிக்கெட் ஆரம்பம் ஆன ஆண்டு என்று 1721ம் ஆண்டினைக் குறிப்பிடுவார்கள். இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஆண்டு இது என்ற குறிப்பினை விஸ்டன் (Wisden) என்பவர் குறித்து வைத்திருக்கிறார்.

இந்தியத் துணைக் கண்டத்திற்கு வந்து குடியேறிய பெருந்தனக்காரர்களாலும், இராணுவ வீரர்களாலும் தான் கிரிக்கெட் இங்கே காலூன்றியது. கிழக்கிந்தியக் கம்பெனியாரின் கப்பலில் பயணம் செய்து வந்து இறங்கிய மாலுமிகளும், கப்பற்படையில் பணியாற்றிய வீரர்களும் முதன் முதலில் இந்த ஆண்டில் தான் பம்பாய் (Bombay) நகரில் விளையாடினார்கள்.

அவர்கள் ஓடிய விதமும், ஆனந்தமாகக் கூடி ஆடிப் பொழுதை கழித்த சுகமும், பார்வையாளர்களாகிய இந்தியர்களை மிகவும் பரவசத்தில் ஆழ்த்தியது. இந்தியர்கள் ஆட்டத்தின் தன்மைகளை அறிந்து கொண்டதுடன், அந்த ஆட்டத்தின் நுணுக்கங்களைக் கிரகித்துக் கொண்டதுமல்லாமல், ஜீரணித்தும் கொண்டார்கள். அதன் விளைவாக, கிரிக்கெட் ஆட்டம் அவர்களிடையில் விமரிசையாக, சொல்லிலும் செயலிலும் வளர்ச்சி அடையத் தொடங்கியது.