பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


இவ்வாறு நாட்டு மக்களிடையே கிரிக்கெட் ஆட்டம் நனிசிறந்த முறையில் வளர்ச்சி பெற்றது. கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றிப் பேசுவதும், அதைப் பார்ப்பதும், காதோரத்தில் ரேடியோ வைத்து ஆட்ட வருணணையைக் கேட்பதும், படித்தவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் சூழ்நிலையை மக்கள் மனதிலே உருவாக்கும் அளவுக்கு மக்கள் மன்றத்திலே செல்வாக்கு நிறைந்தாக செழிப்புடன் விளங்கியது.

1892-93ம் ஆண்டுகளில் ஒரு மாகாணத்திற்குள்ளே என்று பல போட்டிகள் நடைபெற்று வந்த நிலைமாறி, மூன்று மாகாணங்கள் சேர்ந்து, தங்களுக்குள் விளையாடும் மும்முனைப்போட்டி ஆட்டங்களை நடத்தி மகிழும் அளவுக்கு 1907-1908ம் ஆண்டுகளில் நிலைமை தெளிவும் பொலிவும் பெற்றோங்கியது. அதன்பின், நான்கு மாகாணங்களுக்குள் நடைபெறும் போட்டி என்று 1912-1913ம் ஆண்டிலும் ஐந்து மாகாணங்களுக்கிடையே போட்டிகள் 1937-38ம் ஆண்டிலும் நடைபெற்றன. மாகாணங்களுக்கிடையே கிரிக்கெட் வளர்ச்சியுறுவதைக் கண்டு, தேசிய அளவுப் போட்டி ஒன்றை நடத்திவிட வேண்டும் என்று தெளிந்தனர் ஆட்ட வளர்ச்சியில் அக்கறை கொண்ட பெரியவர்கள்.

எல்லா இளவரசர்களிடத்திலும் நன்மதிப்பும் கெளரவமும் பெற்றிருந்த A.S. டிமில்லோ (A.S. Demello) என்பவர் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியால், 1934-35ம் ஆண்டு தேசிய கிரிக்கெட் பெரும்போட்டி ஒன்று தொடங்கப்பெற்றது. அதற்குரிய வெற்றிக்கோப்பையாக பாட்டியாலா மகாராஜா ஒரு கேடயத்தை வழங்கினார். அது ரஞ்சித்சிங்ஜி என்பவரைப் பெருமைப் படுத்துவதற்காக, ரஞ்சிக்கோப்பை (Ranji Trophy) என்று பெயர் சூட்டினார்கள். இப்பொழுது மாகாணங்களுக்கிடையே நடக்கும் போட்டிகளுக்கு ரஞ்சிக்