பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


ஏறத்தாழ 75 ஆண்டுகள் இரண்டு கம்புகள் இருக்கும் விக்கெட்டே தொடர்ந்து இருந்து வந்தது. அந்நாட்களில் எந்தவிதமானப் பிரச்சினையும் எழவில்லை. 1775ம் ஆண்டு ஆர்ட்டிலரி மைதானத்தில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டி ஆட்டத்தில்தான் புதிய பிரச்சினை ஒன்று தோன்றியது. அதுவும் இங்கிலாந்தில்தான். ஸ்மால் (Small) என்பவர் பந்தடித்தாடும் ஆட்டக்காரர் (Batsman), லம்பி (Lumpy) என்பவர் அப்பொழுது பந்தெறியாளர் (Bowler). லம்பி எறிந்த பந்தானது ஸ்மால் தடுத்தாடும் மட்டையில் படாமல், ஊன்றியுள்ள விக்கெட் கம்புகளையும் தொடாமல் , இடையேயிருந்து இடைவெளிக்குள்ளே போய்க்கொண்டிருந்தது. போனது ஒரு முறையல்ல. பல முறை பந்தானது படாமல் போனதால் பிரச்சினை மிகுந்தது. இவ்வளவு தூரம் இடைவெளி இருப்பதால்தானே, பந்தால் கம்புகளைத் தொட்டு வீழ்த்த முடியவில்லை என்பதால், இரண்டுக்கும் இடையில் மூன்றாவது ஒரு கம்பை ஊன்றி விட்டால், இடைவெளியையும் மூடலாம். விக்கெட்டும் முழுமை பெறும் என்று முடிவு கட்டிவிட்டனர். மூன்றாவது கம்பு வருவதற்கு முன்னே, இந்த இலக்குக்கு விக்கெட் என்ற பெயர் எவ்வாறு வந்தது என்பதையும் சற்று காண்போம். 'விக்கெட்' (Wicket) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, கதவினுள் கதவு அதாவது சிறு கதவு என்பதாகும். அதாவது பெரிய கதவு இருக்கும்போது, அதை அடிக்கடி திறக்கக்கூடாது என்பதற்காக, கதவில் ஒரு சிறிய நுழைவாயில் ஒன்றை அமைத்து அதனை பயன்படுத்துவார்கள். அந்த சிறு கதவுக்கே 'விக்கெட்' என்பது பெயராகும்.