பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

53


இந்த தான்தோன்றித்தனமான நிலைமையை தூக்கியெறியத்தக்கதான சூழ்நிலை ஒன்று 1771ம் ஆண்டு தோன்றியது. இங்கிலாந்தில், கிரிக்கெட் ஆட்டத்தின் ஆரம்ப நாட்களில், பந்தயம் கட்டிக்கொண்டு போட்டி நடத்தப் பெறுவது மிகவும் சகஜமான ஒன்றாகும். அதுபோல் 1771 ம் ஆண்டு, ஹேம்பிள்டன் என்ற குழுவிற்கும் சொட்சி என்ற குழுவிற்கும், ஒரு போட்டிப் பந்தயம் நடைபெற்றது. அதற்காக 1000 ரூபாய்க்கு மேல் பந்தயப் பணம் கட்டப்பட்டிருந்தது. செர்ட்சி குழுவைச் சேர்ந்தவர்கள் பந்தடித்தாடும் வாய்ப்பினைப் பெற்றிருந்தனர். அக்குழுவில் உள்ள தாமஸ் ஒய்ட் என்பவர் பந்தடித்தாடச் சென்றார். அவள் கொண்டு வந்திருந்த பந்தாடும் மட்டையோ, விக்கெட்டின் அகலம் எவ்வளவோ, அவ்வளவு அகலமானதாக அமைந்திருந்தது. விக்கெட்டின் முன்னால் அவர் பந்தாடும் மட்டையை வைத்துக் கொண்டு நின்று கொண்டாரேயானால், அந்த மட்டையைக் கடந்து, எறிகின்ற பந்து போகவே போகாது. தந்திரசாலியான தாமஸ் ஒய்ட் தயார் செய்து கொண்டு வந்த மட்டையைக் கண்டதும், ஹேம்பிள்டன் குழுவினர் கூச்சல் போடத் தொடங்கிவிட்டனர். கூச்சல் குழப்பமாகி, குழுவினரிடையே கொந்தளிப்பை உண்டு பண்ணியே விட்டது.

கூச்சல் குழப்பமாகி, குழுவினரிடையே கொந்தளிப்பும் ஏற்பட்டதால் பல பிரச்சனைகள் எழுந்தன. பிறகு, ஆங்கே சமாதானத்திற்கிடையே ஒரு புதிய விதி பிறந்தது. அதாவது பந்தாடும் மட்டையின் அகலமானது 4 1/4 அங்குலம் இருக்க வேண்டும். அதற்குமேல் இருக்கவே கூடாது. என்பதற்காக புதிய விதி பிறந்து, பந்தாடும் மட்டைக்கு புது வடிவம் கொடுத்தது