பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

59


ஆஸ்திரேலியாவைப் பின்பற்றி இங்கிலாந்து ஆட முயற்சி செய்தது. ஆனால், இரண்டாம் உலகப் போர் வந்து அவர்கள் அதனைத் தொடரவிடாமல் செய்து விட்டது. காரணம் இங்கிலாந்து போரில் ஈடுபட்டிருக்கும்போது ஆட்டத்தின் நிலை எப்படி முன்னேறும்?

இதனால், இங்கிலாந்து மீண்டும் 6 முறை பந்தெறி வாய்ப்புமுறைக்கே சென்றுவிட்டது. 1920ம் ஆண்டிலிருந்தே 6 முறை பந்தெறியும் வாய்ப்புள்ள தவணை முறை ஆட்டமும் பின் பற்றப்பட்டு வந்தது என்றும் ஒரு குறிப்பு கூறுகிறது.

இருந்தாலும், ஆஸ்திரேலியாவும், நியுசிலாந்தும் 8 முறை பந்தெறியும் ஆட்டமுறையையே ஏற்றுக்கொண்டு விட்டன. இதை ஒட்டி 1947ம் ஆண்டு ஒரு புதிய விதி தோன்றியது. ஆடுகின்ற இரண்டு குழுக்களின் தலைவர்களும் கூடிப்பேசி, பந்தெறி தவணையில் உள்ள பந்தெறிகளின் எண்ணிக்கையை முடிவு செய்து கொள்ளலாம் என்பது தான் புதிய விதியாகும்.

1744ம் விதியின்படி, ஒரு பந்தெறியாளர் (Bowler) ஒரு முறை ஆட்டத்தில் (Inning) ஒரு முறைக்கு மேல் பக்கம் மாற்றிக் கொள்ளக்கூடாது. ஆனால், 1870ம் ஆண்டு, இரண்டு முறை மாற்றிக் கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது. பக்கம் மாற்றிக்கொள்ளும் முறையையே 1889-ம் ஆண்டிலிருந்து நீக்கியும் தொடர்ந்தாற்போல் இருபுறமிருந்தும் பந்தெறியும் உரிமையையும் அவ்விதி நீக்கிவிட்டது.

1838-ம் ஆண்டுவரை, ஒரு பந்தெறியாளர் இரண்டு முறை சோதனையாக எறிந்து பார்த்துக்கொள்ளலாம் (Trial or Practice Balls) என்று அமைக்கப்பட்டிருந்தது நீக்கப்பட்டது.

இவ்வாறு, பந்திலும் பந்தெறி தவணையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு தற்பொழுது ஆட்டம் சிறந்த மறுமலர்ச்சியைப் பெற்றிருக்கிறது.