பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

73


புதிய விதியானது, ஒரு பொறுமையான தன்மையில் பிறந்தது. ஒரு பந்தடி ஆட்டக்காரர் (Batsman) தனது விக்கெட்டைத் தாக்கப் போகின்ற பந்தைக் கால்களால் வேண்டுமென்றே தடுத்தால், அவர் ஆட்டமிழந்தவராகின்றார் (Out) என்பதுதான் அந்த விதி. நான்காண்டுகள் இந்த விதியே சிறந்த விதியாக விளங்கிக் கட்டுப்படுத்தியது என்றாலும், அதிலே பல சிக்கல்கள் கிளைத்தெழுவது போல் தோன்றியதால், புதிய மாற்றம் ஒன்றைச் செய்ய முனைந்தனர் ஆட்ட வல்லுநர்கள். 1788-ஆம் ஆண்டு புதிய திருத்தம் ஒன்று விதியில் புகுந்தது. வேண்டுமென்றே தடுத்தால் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, 'விக்கெட்டின் முன்னே பந்து விழுந்து, விக்கெட்டை நோக்கி வருகின்ற பந்தைத் 'தடுத்தால்' என்று திருத்திவைத்தனர். திருத்தம் பெற்றுக்கொண்ட விதியானது ஆட்டத்திற்குப் பொருத்தமில்லாதது போல் தோன்றியதனாலோ என்னவோ, வளர்ந்து வரும் தொடர்ந்து வரும் பிரச்சினையை அது தீர்த்து வைக்க இயலாததாக இருந்ததால். 1821-22ம் ஆண்டில் மேலும் ஒரு சிறு திருத்தம் இடையிலே செய்து செருகப்பட்டது.

விக்கெட்டின் முன்னே பந்து நேராக விழுந்து வர வேண்டிய அவசியமில்லை. ஆனால், விக்கெட்டிற்கு நேராகப் பந்தை எறிந்திருந்தால் போதும் (Delivered straight) என்கிற விதிதான் 1821-22ல் வந்தது. நேராக வரவேண்டியது அவசியமில்லை; நேராகப் பந்தை எறிந்திருந்தால் போதும் என்கிற விதிக்கு உண்மையான அர்த்தத்தை நடுவர்களே புரிந்துகொள்ள முடியாமல் திணறத் தொடங்கி விட்டார்கள். குழப்பத்தைக் குவித்து வைக்கின்ற அளவுக்குக் குறித்துக் காட்டுகின்ற விதியை, எல்லோரும் ஏற்றுக்கொள்ளாமல் மறுப்பு விடுத்ததற்கேற்ப, 1839-ம் ஆண்டு. ஒரு புதிய நிலையை தெளிவு தர மீண்டும் ஏற்படுத்தினார்கள்.