பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

83


சவாரி செய்பவர்கள் போன்ற தோரணையில் ஆடினர். அவர்கள் இறுக்கும் கயிற்றால் முடியப்பெற்ற காலணியை அணிந்தும் ஆடினர். இவ்வாறு முதல் தர தோற்றமான ஆடை அலங்காரம், கிரிக்கெட்டில் தலைகாட்டத் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, ஹேம்பிள்டன் குழுவைச் சேர்ந்தவர்கள், தாங்கள் தலையில் அணிந்திருந்த தொப்பியை சுற்றிலும், தங்கச் சரிகை அல்லது வெள்ளிச் சரிகையை தைத்து. தங்கள் தனித்தன்மையை பறைசாற்றிக் கொண்டனர்.

அதே ஹேம்பிள்டன் சங்கத்தைச் சேர்ந்த மற்றொரு குழுவினர், நீலநிறக் கோட்டினை அணிந்து, அதற்கு நீலநிற வெல்வெட் காலரை அணிந்து, தாங்கள் அணிந்திருந்த கோட்பித்தான்களில் CC என்ற எழுத்துக்களையும் எழுதி, தங்கள் சீருடையைக் காட்டி வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.

அதைத்தொடர்ந்து, 18ம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் ஆடிய ஆட்டக்காரர்களின் ஆசையும் எண்ணமும், இன்னும் சற்று முன்னேறத் தொடங்கியது. குதிரைப் பந்தயத்தில் குதிரை ஒட்டும் குதிரைக்காரர்களான 'ஜாக்கி' அணிகின்ற தலைக்குல்லாய் போல அணிய ஆசைப்பட்டு, அணிந்து கொண்டு ஆடினார்கள். அதன்பின், தலையில் உயரமான குல்லாய்களை (High Hat) அணிந்தார்கள். வைக்கோலினாலும் ஆன குல்லாய்களையும் (Straw Hat) அணிந்தும் ஆடி மகிழ்ந்தனர்.

வேட்டைக்குப் போகின்றவர் அணிவது போல, முழங்கால் வரை ஸ்டாக்கிங்ஸ் அணிந்து கொண்டிருந்த ஆடை அணி முறை, மாற்றம் பெறத்தொடங்கியது. அதில் சங்கடத்தையும். ஆடமுடியாத, ஒட முடியாத வசதியின்மையையும் உணர்ந்து, நீண்ட முழுக்கால் சட்டையை அணிந்தார்கள். அதில், இரும்பாலான பெரிய பக்கில் (Buckle) இருப்பது போன்று. இடைவாரும் அணிந்து கொண்டனர்.