பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


இந்நாளில் எல்லா விவரங்களையும் ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளத்தக்க வகையில் ஆட்டக்குறிப்பேடுகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இப்படி அமைந்திருப்பதானது, இவ்வளவு காலம் ஆட்ட நேரத்தில் ஏற்பட்ட அனுபவத்தின் சாரமேயாகும்.

11. இரு நாடுகளுக்கிடையே பெரும் போட்டிகள் (Test Matches)

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளில் தான் கிரிக்கெட் ஆட்டம் அதிகமாக ஆடப்பெற்று வருகிறது. ஏறத்தாழ எட்டு நாடுகள்தான் இந்த ஆட்டத்தின் புகழ் பெற்ற நாடுகளாக விளங்குகின்றன.

இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், ஸ்ரீலங்கா, தென் ஆப்பிரிக்கா.

ஒவ்வொரு நாடும் தனது குழுவை, வேறொரு நாட்டிற்கு அனுப்பி, பல போட்டி ஆட்டங்களை ஆடச்செய்கின்ற முறையைத்தான் Test Match என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு நாடும் தனது ஆட்டக்காரர்களின் ஆடும் திறனை சோதித்துப் பார்த்து, எந்த நாட்டினர் சிறந்த அணியினர் என்று பார்த்து, பேசி பெருமைப் படுத்தவே இப்படி ஆடுகின்றனர் போலும்.

போட்டி மட்டும் முக்கியமல்ல, நாடுகளுக்கிடையே நடைபெறுகின்ற போட்டியானது, நாடுகளுக்கிடையே நல்லுறவை வளர்த்துக் கொள்ள வழிவகை செய்கிறது என்பதே அடிப்படை நோக்கமாகும்.

இந்தியாவும் உலகிலேயே சிறந்த கிரிக்கெட் ஆடும் நாடாகத் திகழ்கின்றது. பெரும் சோதனைப் போட்டியில் பல நாடுகளுக்கிடையே போட்டியிட்டு பலமுறை வென்றும் இருக்கிறது.