பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

விக்கெட் காப்பாளர், அடித்தாடும் ஆட்டக்காரரின் பின்புறமுள்ள விக்கெட்டின் பின்புறமிருந்து ஆடவேண்டும் என்பதே விதிமுறையாகும்.

அவர், தன் குழு பந்தெறியாளர் எறிகின்ற பந்து அடித்தாடுபவரைக் கடந்து, விக்கெட்டில் படாமல் போகும்போது அதைப் பிடித்துக் கொள்வதற்காகவும்; அவரது மட்டையில் பட்டு வருகின்ற பந்தைப் பிடித்துக் கொள்வதற்காகவும், (Catch); அவர் அடித்தாடும் எல்லைக் கோட்டினைக் கடந்து போய் நின்றால் பந்தோடு விக்கெட்டினை வீழ்த்தவும் போன்றவற்றிற்காகவும் அவர் அங்கே நின்று கொண்டிருக்கிறார்.

86. பந்தெறியால் வருகின்ற பந்தை விக்கெட்டுக்கு முன் புறம் கை நீட்டிப் பிடிக்கலாமா?

கூடவே கூடாது. பந்தெறியாளர் எறிகின்ற பந்தானது, அடித்தாடுபவரின் பந்தாடும் மட்டை அல்லது அவரது உடலின் ஏதாவது ஒரு பகுதியைத் தொடும் வரை அல்லது பட்டோ படாமலோ விக்கெட்டைக் கடக்கும் வரை, அல்லது அடித்தாடுபவர் ஓட்டம் எடுக்க முயற்சிக்கும்வரை, தான் காக்கின்ற விக்கெட்டின் பின் புறத்திலேதான் நிற்கவேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும், விக்கெட்டின் முன்புறம் கையை நீட்டிப் பந்தைப் பிடிக்கக்கூடாது.

87. இந்த விதியை மீறி, விக்கெட் காப்பாளர் நடந்து கொண்டால்?

அந்த அடித்தாடும் ஆட்டக்காரர் ஆட்டமிழக்க மாட்டார். மீண்டும் ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடுமாறு நடுவர் ஆணையிடுவார்.