உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

வீரமாமுனிவர்


முனிவர் இயற்றிய உரைநடை நூல்களுள் தலை சிறந்தது என்று போப்பையர் கூறுகின்றார்.

சமயத்துறையில் எழுத்துவாதம் நிகழ்த்துவதிலும், வாக்குவாதம் செய்வதிலும் வீரமாமுனிவர் சிறிதும் தளர்ந்தவரல்லர். தரங்கம்பாடியில் அமைந்த[1] தேனிய சங்கத்தார்க்கும், வீரமாமுனிவர்க்கும் பெரியதோர் வாதம நிகழ்ந்தது. தேனிய சங்கத்தாரது கொள்கைகளை மறுத்து ஒரு நூல் எழுதினார் முனிவர். அதற்கு வேத விளக்கம் என்பது பெயர். தேனிய சங்கத்தார் வேத விளக்கத்தை மறுத்துத் திருச்சபை பேதகம் என்னும் பெயரால் ஒரு சிறு நூல் வெளியிட்டார்கள். அதற்கு மறுப்பாக முனிவர் பேதகம் அறுத்தல் என்று பெயரிட்டு ஒரு கட்டுரை எழுதினர். இவ்வாறாக வாதம் வளர வளரத் தமிழ் வசன நடையும் திருந்தி வளர்வதாயிற்று. இது வாதத்தால் விளைந்த நலம்.

இன்னும் முனிவர் பல வாக்கு வாதங்களும் செய்ததாக அவர் சரித்திரம் கூறுகின்றது. ஒருகால் முனிவரை வாதிலே வெல்லக்கருதி, ஒன்பது சடைப்பண்டாரங்கள் திருக்காவலூரில் போந்து ஒரு மாதகாலம் அவரோடு பெருவாதம் செய்து தோற்றார்கள் என்றும், தோற்றவர்களில் அறுவர் யேசு மதத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்றும், ஏனைய மூவரும் தம் சடையை அறுத்தெறிந்துவிட்டுப் போயினர் என்றும் சொல்லப்படுகின்றது.


  1. The Danish Mission at Tranquebar.