பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீரமாமுனிவர்

9


பின்னொரு சமயம் சிவப்பிரகாச முனிவர் என்னும் வீர சைவப் பெரியார்க்கும், வீரமாமுனிவர்க்கும் ஒரு வாதம் நிகழ்ந்ததாம். கிருஸ்து மதக் கொள்கைகளை எடுத்துரைத்தாராம் வீரமாமுனிவர். அவற்றைச் செம்மையாக மறுத்து வெற்றி பெற்ற சிவப்பிரகாசர் 'ஏசு மத நிரா கரணம்' என்னும் பெயரால் ஒரு நூல் இயற்றினர் என்று அவர் சரித்திரம் கூறுகின்றது. இக்கதைகளை யெல்லாம் முற்றும் நம்ப முடியாவிட்டாலும் வீரமாமுனிவர் வாது செய்வதில் விருப்புடையவர் என்பது நன்கு விளங்குவதாகும்.

வீரமாமுனிவர் தமிழ் மொழியின் இலக்கணத்தையும் நன்றாக ஆராய்ந்தார். தொல்காப்பியம் முதலாக நன்னூல் ஈறாகவுள்ள இலக்கண நூல்களேயெல்லாம் கற்றார் ; 'தொன்னூல் விளக்கம்: என்னும் பெயரால் ஒரு செந்தமிழ் இலக்கணம் செய்தார். அது பெரும்பாலும் பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலை ஒத்திருக்கின்றது. ஆயினும் நன்னூலில் எழுத்திலக்கணமும், சொல்லிலக்கணமும் மட்டுமே உண்டு. வீரமாமுனிவரது தொன்னூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணமும் அடங்கியுள்ளன. "அருந்தமிழ் இலக்கணம் ஐந்தையும் விரித்து விளக்கினன் வீரமாமுனியே“ என்பது தொன்னூலின் சிறப்புப் பாயிரம். மேலைநாட்டுச் சிறந்த கருத்துக்களும் அந்நூலில் அமைந்து அழகு செய்கின்றன. இன்னும் ஏட்டுத் தமிழுக்கும் [1]பேச்சுத் தமிழுக்கும் உள்ள வேற்றுமையை


  1. பேச்சுத் தமிழின் இலக்கணத்திற்குக் 'கொடுந் தமிழ் இலக்கணம்' என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.