பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போப்பையர்

17


படிப்போர் மனத்தை உருக்கிப் பக்தியை விளைவிக்கும் பான்மையில் ஒப்பற்ற நூல் திருவாசகம். "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்“ என்பது இந்நாட்டில் நெடு மொழியாக வழங்குகின்றது. அந்நூலில் அடங்கிய அறுநூற்று ஐம்பத்தெட்டுப் பாடல்களையும் போப்பையர் ஆராய்ந்து அறிந்தார். ஆக்ஸ்போர்டு சர்வகலாசாலையில் ஆசிரியராக இருந்தபோது இவர் அந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கத் தொடங்கினர். அப்போது இவருக்கு வயது எழுபத்தேழு. எடுத்த வேலை முடியுமளவும் உயிர் இருக்குமோ என்ற ஐயம் இவர் உள்ளத்தில் எழுந்ததுண்டு.

ஒரு நாள் மாலேப்பொழுதில் பால் நிலா எங்கும் பரந்திருந்தது. பாலியல் கலாசாலைத் தலைவராகிய பெரியாரும் போப்பையரும் ஒரு நிலாமுற்றத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப் பெரியாரிடம் திருவாசகத்தின் பெருமையை எடுத்துரைத்தார் போப்பையர். இப்படிப்பட்ட புத்தகத்தை விரைவில் அச்சிட்டு வெளியிடல் வேண்டும் என்று அழுத்தமாகக் கூறினர் பெரியவர். அவரது ஆர்வத்தை அறிந்த போப்பையர், "ஐயனே, அவ்வேலை முடிவதற்கு நெடுங்காலம் செல்லுமே; நான் சாகாவரம் பெற்றிலேனே“ என்றார். அது கேட்ட பெரியவர் போப்பையர் தோளைப் பற்றிக் கொண்டு, அறிஞரே! ஒரு பெரிய வேலையைத் தொடங்கி நடத்துவதுதான் நெடுங்காலம் வாழ்வதற்குரிய வழி. அவ்வேலை முடியுமளவும் உயிர் இருந்தே தீரும்“ என்று உறுதியாகக் கூறினர். அவ்வாய்மொழியைப் போப்பையர் தாரக மொழி

41—3