பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கால்டுவெல் ஐயர்


மேல் நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற் போந்து தமிழ்த் தொண்டு செய்த அறிஞருள்ளே தலை சிறந்தவர் மூவர். வீரமாமுனிவர் ஒருவர் ; போப்பையர் மற்றொருவர்; இன்னொருவர் கால்டுவெல் ஐயர். இம்மூவரும் மூன்று வகையிலே தமிழ் மொழிக்குத் தொண்டு செய்தவர்கள். வீரமாமுனிவரும் போப்பையரும் செய்த சேவையை முன்னமே அறிந்தோம். இனி, கால்டுவெல் ஐயர் ஆற்றிய தமிழ்த் தொண்டைச் சிறிது கருதுவோம்.

கால்டுவெல் ஐயர் தம் வாழ்க்கை வரலாற்றை நான்கு வாக்கியங்களில் நன்கு விளக்கியுள்ளார். "நான் அயர்லாந்து தேசத்திலே பிறந்தேன். ஸ்காத்லாந்து தேசத்திலே கல்வி பயின்றேன்; ஆங்கில நாட்டுக் கிருஸ்தவ சங்கத்தைச் சார்ந்தேன் ; ஆயினும் இந்திய தேசத்திலே நெடுங்காலம் வாழ்ந்து, இந்தியரது வாழ்க்கையில் ஈடுபட்டமையால் நான் இந்தியருள் ஒருவனுய் விட்டேன்“ என்று அவர் கூறுகின்றார்.

கால்டுவெல், கிருஸ்தவ சங்கத் தொண்டராய் ஆயிரத்து எண்ணூற்று முப்பத்தெட்டாம் ஆண்டில் சென்னமா நகர் வந்துசேர்ந்தார். அப்போது அவருக்கு வயது இருபத்து மூன்று. அது முதல் அவர் ஐம்பத்து மூன்று ஆண்டுகள் தமிழ் நாட்டில் அருந்தொண்டு புரிந்தார். திருநெல்வேலி நாட்டிலுள்ள இடையன்குடி என்னும் சிற்றூரை அவர் இருப்பிடமாகக் கொண்டார். நெல்லைநாடு அவரைத் தன் மகனக ஏற்றுக்கொண்டது.