பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23


விளைந்தது. அழகாக உருண்டு திரண்ட ஆணி முத்து அங்கே அகப்பட்டதென்று நெல்லை நாட்டுக் கவிஞராகிய குமர குருபரர் கூறுகின்றார்[1]. முத்து விளைந்த கொற்கைத் துறையைப் பழைய கிரீக்க ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சீரும் சிறப்பும் வாய்ந்து விளங்கிய கொற்கை இப்பொழுது திருநெல்வேலி நாட்டிலே கடற்கரையிலிருந்து ஐந்து மைல் தூரத்தில் உள்ள சிற்றூராகக் காணப்படுகின்றது. அவ்வூருக்குச் சென்றார் கால்டுவெல் ஐயர் ; அதனைச் சிறிது துருவிப்பார்க்க ஆசைப்பட்டார்; திருநெல்வேலிக் கலெக்டரிடம் அனுமதிபெற்றுக் குறிப்பிட்ட சில இடங்களைத் தோண்டுவதற்கு ஏற்பாடு செய்தார். அப்போது கொற்கையூர் வாசிகள் திரண்டு எழுந்தார்கள் ; "வெள்ளைக்காரப் பாதிரியார் புதையல் எடுக்கப் புறப்பட்டு வந்தார்“ என்று எண்ணினார்கள். முன்னோர் பாடுபட்டுத் தேடி மண்ணிலே புதைத்து வைத்த பொன்னும் பொருளும் பூதங்களின் வசப்பட்டிருக்கும் என்றும், அவற்றை எவரேனும் புரட்டி எடுக்க முயன்றால் அப் பூதங்கள் கிளர்ந்தெழுந்து ஊராரையெல்லாம்


 1. "கோடும் குவடும் பொருதரங்கக் குமரித்துறையிற்
  படுமுத்தும் கொற்கைத் துறையில் துறைவாணர்
  குளிக்கும் சலாபக் குவால் முத்தும்
  ஆடும் பெருந்தண் துறைப் பொருநை
  ஆற்றிற் படுதெண் நிலா முத்தும்
  அந்தண் பொதியத் தடஞ்சாரல்
  அருவிசொரியும் குளிர் முத்தும்“

  என்பது அவர் அருளிய பாட்டு.