பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

கார்டுவெல் ஐயர்


தென்னிந்திய சர்வ கலாசாலைகளில் திராவிட மொழிகள் ஏற்றமும் தோற்றமும் பெற்று விளங்குவதற்கு அடிப்படை கோலியவர் அவரே. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் பெயரால் அவர் எழுதியுள்ள ஒப்பற்ற இலக்கணம் தென்னிந்திய மொழிகள் உள்ளளவும் அழியாததாகும்.

கால்டுவெல் ஐயர் பல மொழிகளைக் கற்றறிந்த வித்தகர். அவர் இளமையிலேயே மேலைநாட்டுச் செம்மொழிகளாகிய கிரிக்கும் லத்தீனும் கற்றிருந்தார் ; கிருஸ்து மதப் பழைய வேதங்களை விளக்கமாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு ஈபுரு மொழியைப் படித்தார் ; தமிழ் நாட்டுக்கு வந்த பின்னர் வடமொழியாகிய ஆரியத்தையும், தென் மொழியாகிய தமிழையும் ஆர்வத்தோடு பயின்றார்; ஜெர்மானிய அறிஞர்கள் இந்திய மொழிகளைக் குறித்து எழுதியிருந்த ஆராய்ச்சி நூல்களை அறிந்து கொள்வதற்காக ஜெர்மானிய மொழியைக் கற்றார். இவ்வாறு சிறந்த பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்த கால்டுவெல் ஐயர் தென்னிந்திய மொழிகளுக்குத் தொண்டு செய்யத் தலைப்பட்டார்.

இயற்கையிலேயே மொழி நூல் ஆராய்ச்சியில்[1] ஆர்வமுடையவராயிருந்தார். கால்டுவெல். ஸ்காத்லாந்து தேசத்திலுள்ள கிளாஸ்கோ சர்வ கலாசாலேயில் அவர் கல்வி பயின்றபோது அவ்வாசை அதிகரித்தது. அதற்குக் காரணமாக இருந்தவர் அச்சர்வகலாசாலையில் கிரீக்குமொழி கற்பித்த பேராசிரியர். அவர் ஊக்கமாக நடத்திய மொழி நூற்பாடம் கால்டுவெல் உள்ளத்தில்


  1. Comparative Philology.