பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30


அகத்தியர் இயற்றிய இலக்கணம் மறைந்துவிட்டமையால் ஆரிய இலக்கணத்தைப் பின் பற்றித் தமிழிலக்கணம் எழுதத் தலைப்பட்டார் பலர். வீரசோழியம் என்னும் இடைக்காலத் தமிழிலக்கணம் அப்போக்கை நன்கு காட்டுகின்றது. நாளடைவில் ஆரிய மொழியிலிருந்தே தமிழ் முதலிய தென்னாட்டு மோழிகள் எல்லாம் பிறந்தன என்னும் கருத்து நிலைபெறுவதாயிற்று. பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கணக் கொத்து என்ற நூலில் இக்கொள்கை அழுத்தமாகக் கூறப்படுகின்றது. "வட மொழி தென்மொழி எனும் இரு மொழியினும், இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக“ என்றார் அவ்விலக்கண ஆசிரியர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கால்டுவெல் செய்த ஆராய்ச்சியின் பயனாக அக்கொள்கை தவறு என்பது நன்கு விளங்கிற்று. அக்காலத்தில் மதிநலம் வாய்ந்த மேலைநாட்டுத் தொண்டர் நால்வர். நான்கு சிறந்த திராவிட மொழிகளையும் ஆராயத் தொடங்கினார்கள். மலையாள மொழியை [1]டாக்டர் குந்தார்த்தர் துருவி யறிந்தார். கன்னடத்தை டாக்டர் கிட்டல் கற்றுணர்ந்தார். தெலுங்கை பிரெளவுன் என்னும் அறிஞர் ஆராய்ந்தார். தமிழின் நீர்மையை அளவிட்டறிந்து கொண்டிருந்த கால்டுவெல் ஐயர், இம் மூவரும் செய்த ஆராய்ச்சியைத் துணைக்கொண்டு "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்“ என்னும் சிறந்த நூலை இயற்றினார்.


  1. Dr. Gundert