பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எல்லீசர்

35


கவிராயர் முதலியோருடன் ஏட்டுச் சுவடிகளில் அமைந்த தமிழ் நூல்களை நாள் தோறும் மெய்வருத்தம் பாராது கற்றார். பழந்தமிழின் பண்புகளைப் பளிங்குபோற் காட்டும் திருக்குறளை மேலே நாட்டாரும் அறிந்து பயனுற வேண்டும் என்பது அவரது பேராசை. அந்நோக்கத்தைக் கொண்டு திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் விளக்கமான விரிவுரை யொன்று எழுதத் தொடங்கினார். ஆனால் அப்பணி முற்றுப்பெறாது போயிற்று. அடியும் முடியுமின்றி அது அரைகுறையாக அச்சிடப்பட்டிருக்கின்றது. அந்நூல். ஒன்றே எல்லீசரது தமிழ்ப் புலமைக்கு அழியாத நினைவுச் சின்னமாக நிலவுகின்றது.

அந்நூலில் திருக்குறட் பாக்களின் ஆங்கில் மொழி பெயர்ப்பை முன்னே தருகின்றார் எல்லீசர். பரிமேலழகர் உரையைப் பின்பற்றிய விளக்கவுரை பின்னே வருகின்றது. அதைத் தொடர்ந்து சங்கத் தமிழ் இலக்கியங்களிலிருந்தும், பிற்காலத் தமிழ் நூல்களிலிருந்தும் பொருத்தமான மேற்கோள்கள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் காட்டப்படுகின்றன. இறுதியாக இலக்கணக்குறிப்பு எழுதப்பட்டுள்ளது. தொல்காப்பியம், நன்னூல், தொன்னூல் முதலிய இலக்கணங்கள் நன்கு எடுத்தாளப்படுகின்றன. -

எல்லீசரது புலமைத் திறத்தையும், நடுவு நிலைமையையும் அறிந்து கொள்வதற்கு ஒரு சான்று போதியதாகும்.

"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.