பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39


அகப்பட்டது. அந்நூலைக் கண்டு அகமகிழ்ந்தார் முத்துசாமிப் பிள்ளை: அச்சுவடிக்குரியவராகிய நாயக்கரை எல்லீசரிடம் அழைத்துச் சென்றார். அவர் அதனை மிக்க ஆசையோடு ஏற்றுத் தக்கவிலை கொடுத்துப் பெற்றுக் கொண்டார். அருந்தமிழ்ச் சுவடிகளைச் சேகரிப்பதிலும், பாதுகாப்பதிலும் எல்லீசர் சிறந்த ஆர்வமுடையவராயிருந்தார் என்பதற்கு இது ஒன்றே போதிய சான்றாகும்.

எல்லீசர் தமிழ்ச் செய்யுளும் இயற்றியதாகத் தெரிகின்றது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது நமசிவாயப் பாட்டேயாகும். நமசிவாயத்தைப் பற்றி ஐந்து பாட்டுப் பாடியுள்ளார் எல்லீசர்.

"சர்வ வல்லமையுள்ள தெய்வமே! பேரானந்த வடிவாய பெருமானே! பரந்த உலகமெல்லாம் பற்றியாளும் பரமனே ! இம்மண்ணுலகத்தையாளும் சிற்றரசர்கள் தம் குடிகளைக் கண்டித்தும் தண்டித்தும் வரிப்பணம் வாங்குவர். ஆனல் அரசர்க்கெல்லாம் அரசனாய் விளங்கும் நீயோ ஒன்றையும் திறையாகப் பெறுதல் இல்லை. ஆதலால் வாக்காலே திறையளக்கும் வழக்கத்தை விட்டு, என் உள்ளத்தில் ஊறி எழுகின்ற அன்பினையே உனது திருவடியிற் காணிக்கையாகச் சொரிகின்றேன்“ என்ற கருத்தை யமைத்து எல்லீசர் பாடினார்.[1]


  1. "சிற்றிறைவர் இவ்வுலகுள் சிறியோரின் சிறுபொருளில்
    வற்றிறையை வாங்குவரே வல்லமையும் மகிழ்ச்சியுள்ள
    பற்றிறைவன் நீதிறையை வாங்காயே ஆனதினால்
    சொற்றிறைவிட்டுட்டிறையைச் சொரிவேனே நமசிவாய“

    என்பது அப்பாடல்.