பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

எல்லீசர்


"நமசிவாய என்னும் ஐந்தெழுத்து சைவ சமயத்தார் போற்றும் தாரகமந்திரம் ஆயிற்றே! அதனை எவ்வாறு கிருஸ்தவராகிய எல்லீசர் எடுத்தாளலாம்“ என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விடை கூறும் வாயிலாக முத்துசாமிப் பிள்ளை நமசிவாயப் பாட்டுக்கு விருத்தியுரை யொன்று இயற்றிய எல்லீசர் கருத்தை விளக்கிக் காட்டினார் என்பர். "என்றென்றும் நிற்கும் ஏக கடவுட்கு நன்றென்று இதோ புரிந்தேன் நமஸ்காரம்“ என்பதே நமசிவாய என்ற சொல்லின் பொருள் என்பது முத்துசாமியார் கொள்கை. சிவம் என்ற சொல்லுக்கு நன்மை என்னும் பொருள் உண்டு. அது பற்றியே "நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே“ என்ற திருவாக்கு எழுந்தது. அருக தேவனைச் 'சிவகதி நாயகன்' என்று சிலப்பதிகாரம் குறிக்கின்றது. நற்கதியளிக்கும் நாயகனையே சிவகதிநாயகன் என்றார் இளங்கோவடிகள். எனவே, எந்நலமும் தரும் இறைவனேயே சிவ நாமத்தால் எல்லீசரும் குறித்தார் என்பது இனிது விளங்குவதாகும்.

தமிழ் மொழியின் செம்மையையும் தொன்மையையும் குறித்துப் பல ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதி வைத்திருந்தார் எல்லீசர். ஆயினும் அவற்றை முறையாக வகுத்தும் தொகுத்தும் நூல் வடிவத்தில் எழுதுமுன்னமே முத்தமிழ் வளர்த்த மதுரைமா நகரைக் கண்ணாக் கண்டுவர விரும்பினர் ; அரசியலாரிடம் விடுமுறை பெற்று மதுரைக்குச் சென்றார். அங்கு கலெக்டராயிருந்த பெற்றி என்பவர் மனையில் விருந்தினராக