பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41


அமர்ந்து, மதுரை மாநகரைப் பன் முறை சுற்றிப் பார்த்தார். "பாண்டி மன்னர் அரசு வீற்றிருந்து அருந் தமிழை ஆதரித்த நகரம் இதுவன்றோ ? கலை பயில்தெளிவும், கட்டுரை வன்மையும் வாய்ந்த புலவர் பல்லாயிரவர் சங்கத்தின் வாயிலாகத் தமிழ் வளர்த்த தலைநகரம் இதுவன்றோ ?

"புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி“

என்று இளங்கோவடிகள் பாடிய ஆற்றின் கரையில் அமைந்த அழகிய நகரம் இது வன்றோ ? என்று எண்ணி எண்ணி விம்மிதமுற்றார் ; கடைச் சங்கப் புலவர்களில் தலைசிறந்து விளங்கிய நக்கீரரைத் தனிக் கோயிலில் அமைத்து வழிபடும் மதுரைத் தமிழரது ஆர்வத்தைப் போற்றினார்.

இங்ஙணம் மதுரையம்பதியைக் கண்டு புதியதோர் ஊக்கமுற்ற எல்லீசர் ஒருநாள் இராமநாதபுரம் என்னும் மூதூரைக் காணச் சென்றார். அங்கு தாயுமானவர் சமாதி அடைந்த இடத்தைக் கண்டு நெஞ்சுருகி நின்றார். "இன்றைக்கிருந்தாரை நாளைக்கிருப்பர் என்றெண்ணவோ திடமில்லையே“ என்ற பாட்டை உருக்கமாகப் பாடினார். பின்பு அவ்வூரில் காணத்தக்க இடங்களை எல்லாம் கண்டு, நண் பகலில் தம் இருப்பிடம் போந்து உணவருந்தினார். சிறிது நேரத்தில் அவ்வுணவிலே கலந்திருந்த நஞ்சு அவர் குடலை அறுப்பதாயிற்று. மாற்றுக் கொடுக்கவல்ல மருத்துவர் யாவரும் அவ்வூரில் அகப்படவில்லை. எல்லீசர் துயருற்றுத் துடித்து உயிர் துறந்தார்.