பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5. ரேனியஸ் ஐயர்


தமிழ் மொழிக்குப் பேச்சாலும் எழுத்தாலும் பெருந் தொண்டு புரிந்தவருள் ஒருவர் ரேனியஸ் ஐயர். அவர் பிரஷ்யா தேசத்திலே பிறந்தவர். அவர் தந்தை அந்நாட்டுப் பட்டாளத்தில் ஒரு பதவி பெற்ற வீரர். இளமையிலேயே தந்தையை இழந்த ரேனியஸின் உள்ளம் கிருஸ்தவ வேத நெறியிற் கவிந்தது. இருபத்திரண்டாம் வயதில் அவர் அவ்வூர்க் கிருஸ்தவ சங்கத்தைச் சேர்ந்தார்.

அடுத்த ஆண்டில் ஆங்கில நாட்டுச் சர்ச்சு முறைச் சங்கம்[1] அவரைப் பணி செய்ய அழைத்தது. அதற்கிணங்கி ஆங்கில நாட்டிற் போந்து அவர் சில காலம் தொண்டு புரிந்தார் ; பின்பு அச்சங்கத்தின் சார்பாகச் சென்னையில் வந்து சேர்ந்தார்.

தமிழ் நாட்டில் சிறப்பாகக் கிருஸ்தவப் பணி செய்யக் கருதிய ரேனியஸ் ஐயர் தமிழ்மொழியை விரைந்து கற்றார். ஐந்தாண்டு சென்னையில் தொண்டு செய்த பின்பு சங்கத்தார் அவரைப் பாளையங்கோட்டைக்கு மாற்றினர். அங்கு அவர் தமிழறிவு வளம் பெற்றது ; தமிழ்ப் புலமைவாய்ந்த திருப்பாற்கடல்நாதன் கவிராயரை அடுத்துப் பதினாகு ஆண்டு நன்னூல் முதலாய இலக்கணங்களை முறையாகக் கற்றுணர்ந்தார். இனிமையாகப் பேசுந் திறம் அவர்க்கு இயல்பாகவே அமைந்


  1. சர்ச்சு முறைச் சங்கம்-C. M. S. Mission.