பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரேனியஸ் ஐயர்

45


பெயர்ப்பே ஏற்றமுடைய தென்றும் அவர் கருதினார். அவ்வண்ணமே பன்னீராண்டு முயன்று ஆதி நூல்களுக்கு இணங்கப் 'புதிய ஏற்பாடு' முழுவதும் மொழி பெயர்த்து முடித்தார். அவர் மொழி பெயர்த்த நூலைப் பரிசீலனை செய்தது. சென்னை பைபிள் சங்கம். வேத வாக்கை ஒல்லும் வகையில் அடுக்குப் பிறழாமல் அப்படியே மொழி பெயர்த்தல் வேண்டும் என்பது சங்கத்தார் கொள்கை. ஆதலால் ரேனியஸ் ஐயரின் மொழி பெயர்ப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழ் இலக்கணம் பயிலும் மாணவர்களுக்கு அந்நாளில் நன்னூல் ஒன்றே சிறந்த சாதனமாக இருந்தது. நல்லாசிரியர் ஒருவரை யடுத்து அந்நூலைப் பாடங் கேட்டல் அக்காலத்து வழக்கம். ஆனால் அது எல்லோர்க்கும் இயலவில்லை. கிருஸ்தவ சமயத்தைப் பரப்பும் பணியை மேற்கொண்ட அன்பர்கள் எளிதாகத் தமிழிலக்கணத்தைக் கற்றுப் பிழையறப் பேசவும் எழுதவும் வேண்டும் என்று ரேனியஸ் ஆசைப்பட்டார் ; அதற்கு ஏற்ற வகையில் ஓர் இலக்கணம் எழுதினார். அது வீரமாமுனிவர் இயற்றிய கொடுந் தமிழ் இலக்கணத்தைத் தழுவி எழுந்ததாகும். எழுத்தியில், சொல்லியல், தொடரியல் என்னும் மூன்று பகுதிகளையுடைய இவ்விலக்கணத்தில் தொடரியல் விரிவாக எழுதப்பட்டிருக்கின்றது. எழுவாய், பயனிலை முதலிய வாக்கிய உறுப்புக்கள் உரைநடையில் அமையும் பான்மையை ஆசிரியர் பல உதாரணங்களுடன் விளக்கியுள்ளார். தமிழ் நாட்டில் போப்பையரது இலக்கணம் தோன்று-