பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

வேதநாயகம் பிள்ளை


வளர்ப்பதற்காகத் தோன்றிய திருவாவடுதுறை மடத்திற்கு வேதநாயகர் அடிக்கடி சென்று வந்தார். இன்னும், சைவ சமயத்தில் சிறந்த ஆர்வமுடையவரும், திருவாவடுதுறை ஆதீன மகா வித்வானும் ஆகிய மீனாட்சிசுந்தரம் பிள்ளை வேதநாயகரின் ஆருயிர் நண்பர். வேதநாயகரைப் பாட்டுடைத் தலைவனாக அமைத்து அம் மகா வித்வான் ஒரு [1]கோவை பாடினார். குளத்தூர் வேதநாயகர் மீது பாடப்பட்ட கோவையாதலால் அது குளத்தூர்க் கோவை என்று வழங்குகின்றது. அக் கோவையில் தன்னேரிலாத தமிழ்வேத நாயகன் என்றும், நூல் ஆய நோற்ற மதிவேத நாயகன் என்றும் அவர் பெருமையை மகா வித்வான் பாடியுள்ளார்.

தமிழ் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வமுடையவர் வேதநாயகர். நல்ல எண்ணங்கள் இளமையிலே நங்கையர் மனத்திற் பதிதல் வேண்டும் என்பது அவர் கொள்கை. அக் கருத்துக்கொண்டு எழுந்தது 'பெண்மதிமாலை' என்னும் நூல். வேதநாயகர் தம் பெண் குழந்தைகள் படிப்பதற்காக அதனை எழுதினார் என்று தெரிகின்றது. பிறந்த மனையிலும், புகுந்த மனையிலும் பெண்கள் சோம்பலின்றி வேலை செய்தல் வேண்டும் என்றும், வாழ்க்கைப்பட்ட பெண் இல்லாள் என்று சொல்லப்படுவதால் அவளே வீட்டுக்கு அதிபதி என்றும், இல்லறம் நடத்தும் பெண்கள் நாள்தோறும் அறஞ்செய்தல்


  1. இக்கோவை நானுற்று முப்பத்தெட்டுச் செய்யுட்களை உடையது.