பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

கிருஷ்ண பிள்ளை

பெருங் காவியம் என்பது தன்னிகரில்லாத் தலைவனை உடையதாய் இருத்தல் வேண்டும் என்பர் தமிழிலக்கண நூலோர். தமிழ் மொழியில் பெருங் காவியங்கள் சிலவுண்டு. கம்பராமாயணமும், சிலப்பதிகாரமும் இரு பெருங் காவியங்கள். தன்னிகரில்லாத் தலைவனாகிய இராமன் பெருமை. இராமாயணத்தில் பேசப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் தன்னிகரில்லாத் தலைவியாகிய கண்ணகியின் செம்மை போற்றப்படுகின்றது. இவ்விரண்டும் வீரகாவியம். இவ்வுலகில் நிறைந்திருந்த தீமையை வில்லின் ஆற்றலால் வென்று ஒழித்தான் இராமன். கற்பின் வன்மையால் மதுரையம்பதியில் செறிந்திருந்த தீமையைச் சுட்டெரித்தாள் கண்ணகி. இரக்ஷணிய காவியத்தின் தலைவராகிய கிருஸ்து நாதர் இம்மாநிலத்தில் நிறைந்திருந்த தீமையை மகத்தான தியாகத்தின் ஆற்றலால் துடைத்தருளினார். ஆகவே இரக்ஷணிய யாத்திரிகம் ஆத்ம தியாகத்தின் பெருமையை அறிவுறுத்தும் அருங் காவியமாகும்.

கிருஸ்து நாதரது அரும் பெருந்தியாகத்தை அறிவதன் முன்னே, இவ்வுலகில் தீமை புகுந்த தன்மையைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டுமாதலால் இரக்ஷணிய காவியம் தொடக்கத்தில் அதனை எடுத்துரைக்கின்றது. இறைவன் ஆதி மனிதனையும், அவன் மனையாளையும் படைத்து, நிலவுலகத்தில் ஒரு வளமார்ந்த சோலையில் வாழ வைத்தார். அவ் வாழ்க்கையைக் கண்டான் சாத்தன் என்னும் அழிம்பன். அவன் பாவத்தை மணந்தவன் ; பழியைப் பெற்றவன் ; ஆண்டவனது சாபத்தை அடைந்தவன்; அனைவர்க்கும்