பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

கிருஷ்ண பிள்ளை

என்னும் மூத்தி நகரத்தின் நெடிய கோபுரவாசலில் கிருஸ்து நாதரது தியாகக் கொடியைக் காண்கின்றார் கவிஞர். "நீதியும் இரக்கமும் கலந்து நிலவும் திருக்கோபுர வாசலில், கிருஸ்து நாதரது குருதி தேய்ந்த சிலுவைக்கொடி, மாந்தர் எல்லோரையும் இறைவனிடம் பரிந்து அழைக்கும் பான்மைபோல் இளங்காற்றில் அசைந்து ஆடும்“ என்று கவிஞர் உருக்கமாகக் கூறுகின்றார்.

அருள் வள்ளலாகிய கிருஸ்து நாதர் காட்டிய பொறுமையும் கருணையும் வாய்ந்தவரே மெய்க் கிருஸ்தவர் ஆவர் என்பது கிருஷ்ண பிள்ளையின் கருத்து. கிருஸ்தவப் பண்பு இந்நிலவுலகில் நிலை பெறல் வேண்டும் என்பது அவர் ஆசை. "எப்பொழுதும் மெய்யே பேசவேண்டும் : பொய் பேசலாகாது“ என்பது கிருஸ்து நாதர் அருளிய பத்துக் கட்டளைகளுள் ஒன்று. அதற்கு மாறாக "நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடும்“ தீயோரை நோக்கிப் பரிவு கூர்ந்து பாடுகின்றார் இரக்ஷணியக் கவிஞர்.

"அந்நியரையும் உன்னைப்போல் நேசிப்பாயாக என்னும் திருவாக்கை மறந்து, நெஞ்சாரப் பிறரை வஞ்சித்து வாழும் மதிகெட்ட மாந்தரே! மனம், மொழி, மெய் என்னும் மூன்றின் தன்மையையும் முற்றும் அறியவல்ல மகாதேவனை ஒரு நாளும் வஞ்சித்தல் இயலாது. ஆதலால் மனத்தில் நிகழும் அழுக்காறு முதலிய குற்றங்களையும், வாக்கில் நிகழும் பொய் முதலிய தீமைகளையும், செய்கையில் நிகழும் கொலை முதலாய கொடுமைகளையும் நீக்கி இறைவன் திருவருளை அடைந்து வாழ்வீராக“ என்று வேண்டுகின்றார் கவிஞர்.