உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேதநாயக சாஸ்திரியார்

69


பெரியா பழக்கமும் அவருக்கு வாய்த்தது. தமிழ் மொழியில் இயற்கையாகவே கவிந்திருந்த அவருள்ளம் இத்தகைய சேர்க்கையால் இன்னும் அதிகமாகத் தமிழாராய்ச்சியில் ஈடுபடுவதாயிற்று.

தரங்கம்பாடிப் படிப்பு முடிந்தவுடன் தஞ்சைக்குத் திரும்பி வந்தார் வேதநாயகம். அவரது கல்விப் பயிற்சியையும் ஒழுக்கத்தையும் கண்டு களிப்புற்ற சுவார்த்தர் தஞ்சையில் ஒரு வேதக் கல்லூரி[1] நிறுவி, அதற்கு வேதநாயகத்தைத் தலைமையாசிரியராக நியமித்தார். அவரிடம் அரும்பியிருந்த கவித்திறம் அந்நிலையில் விரிந்து மணங்கமழத் தொடங்கிற்று. வேதாகமம் பயிலும் மாணவர்க்கு உணர்ச்சியும் உள்ளக் கிளர்ச்சியும் உண்டாதல் வேண்டும் என்னும் ஆசையால் பல சிறு பாடல்களை இயற்றினார் வேதநாயகம். பராபரன்மாலை, ஞானக்கும்மி, ஆதியானந்தம் முதலிய நூல்கள் அத்தன்மை வாய்ந்தனவாகும்.

பராபரன் மாலை என்பது ஓர் இனிய தமிழ்ப் பாமாலையாக இலங்குகின்றது. பரம்பொருளாகிய இறைவனது - கருணையையும் பெருமையையும் உருக்கமாக எடுத்துரைப்பது அந் நூல். "ஆண்டவனே! உன்னை அடைவதற்கு வேத நெறி யுண்டு; நேசிக்க நெஞ்சுண்டு ; நினைக்க மனமுண்டு; மாசெல்லாம் தீர்ப்பதற்கு ஏசுநாதர் அருளுண்டு; தாயிருக்கச் சேய் தவிப்பதுண்டோ“


  1. வேதக்கல்லூரி--Theological Seminary.