பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

வேதநாயக சாஸ்திரியார்

பட்டது.. தமிழ்ச் சுவை தெரிந்த சென்னைக் கிருஸ்தவ சபையார் அதனைத் தலைக்கொண்டு போற்றினர் ; வேதநாயகத்தைப் பல வகையாகப் பாராட்டினர் ; தேவாலயத்தின் முகப்பில் பெருஞ் சபையொன்று கூட்டி ஞானதீபக் கவிராயர் என்ற பட்டத்தை அவருக்கு - வழங்கினர் ; அறுபது வராகன் பெறும் அழகிய சிவிகையைப் பரிசாக அளித்தனர் ; வேதநாயகத்தைச் சால்வையாலும் - பட்டாலும் அலங்கரித்து, சிவிகையில் ஏற்றி வேப்பேரியை வலம் வந்து சிறப்பித்தனர்.

இவ்வாறு சென்னை நகரத்தார் செய்த சீர்மையெல்லாம் கண்டு களிகூர்ந்த வேதநாயகம் 'சென்னபட்டணப் பிரவேசம்' என்று ஒரு நொண்டி நாடகம் எழுதினார். சென்னையில் அன்பர்கள் அளித்த விருந்துகளும், செய்த சிறப்புக்களும் அந்நாடகத்தில் - இனிமையாக எடுத்துக் கூறப்படுகின்றன. ஆயினும் குறவஞ்சி நாடகம் அரங்கேறுவதற்கு முன்னின்று உதவி செய்த முத்துசாமியா பிள்ளை என்ற கிருஸ்தவரை அந்நூலில் புகழ்ந்து பாடியிருப்பது நரஸ்துதியென்று பலர் கருதுகின்றனர். 'பராபரனைப் பாடுகிறவனே பாக்கியவான்' என்று கூறும் வேத வசனத்திற்கு இந் நாடகம் மாறுபட்ட தென்பது அன்னார் கொள்கை[1].


  1. நரஸ்துதி செய்தமையால் “மூன்று வருஷத்துக்குள்ளே பல்லக்கு நாற்பது வராகனுக்கு விற்கப்பட்டழிந்து போனதுமன்றி அதைக் கொடுத்த சினேகிதர்களுடைய பட்சமும் வெகுதூரம் குளிர்ந்து போயிற்று” என்று அத் நொண்டி நாடகத்தின் முகவுரை எழுதியவர் கூறுகின்றார்.