பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஒன்று இருந்தது, நடந்தது என்ற உண்மையை உலகினர் ஒத்துக்கொண்டார்கள். நான்காண்டகளுக்கு ஒரு முறைதான் அப் பந்தயங்களும் நடந்தன என்பதற்கும் ஆதாரம் இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தாமல், நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஏன் நடத்தப்பெற்றது? என்று உங்களைப் போலவே எல்லோரும் கேட்கின்றனர். அதற்கும் ஒரு கதையை ஆதாரமாக வைத்திருக்கின்றனர். அந்தக் கதையையும் பார்ப்போமா!

தாய்தான் குடும்பத்திற்குத் தலைமைப் பதவி ஏற்று, வழி நடத்திக் கொண்டிருந்த காலம் அதுவாக இருக்கலாம். இல்லையென்றால், ஒரு கூடுடத்திற்கு பெண் ஏன் தலைவியாக இருக்க வேண்டும்? அந்தத் தலைமைப் பதவியை ஏற்பவள் - இரண்டு தகுதிகளில் ஏதாவது ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். ஒன்று அவள் அந்தக் கூட்டத்தினருக்கான தலைமைப் பெண் பூசாரியாக இருக்க வேண்டும். அல்லது பதவிக்கு வருவதற்கு முன்னர், பெண்களுக்கு என்று நடக்கின்ற புனிதமான பந்தயங்களான ஓட்டப் பந்தயங்களில், அல்லது சில சமயங்களில், மல்யுத்தம் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இப்படியாகத் தலைமைப் பதவிக்கு வந்து ராணியாக முடிசூட்டிக்கொண்டு விடுவாள் ஒரு பெண்.

ராணி என்றால் ராஜா வேண்டுமல்லவா? அவ்வாறு ராணிக்குக் கணவனாக வரத் தகுதியும் யோக்கிதையும் வேண்டாமா அந்தத் தகுதியைத் தந்தது விளையாட்டுப் பந்தயங்களே! மனிதர்களுக்கான ஓட்டப் பந்தயங்களில் வெற்றிபெற்ற முதல் வெற்றி வீரனே கணவனாகவும், மன்னனாகவும் ஆகக்கூடிய மாபெரும் வாய்ப்பைப் பெற்றுவிடுகிறான். விளையாட்டுப் போட்டிகளிலே வெற்றி பெற்ற பெண் ராணியாகவும், ஆண் அரசனாகவும் மாறி, அந்த மக்களை ஆள்கின்றார்கள்.